பற்றாக்குறையை சமாளிக்க சூரிய ஒளி மின் சக்தியே தீர்வு


திருப்பூர்: ""மின் தேவைக்கும், பற்றாக்குறைக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியே தீர்வு; சோலார், பயோ மாஸ் காஸிபயர் ஆகியவற்றை வணிக ரீதியில் அமைத்து, அதிக வருவாய் ஈட்டலாம்,'' என கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேல் பேசினார்.
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்த கருத்தரங்கு, திருப்பூரில் நேற்று நடந்தது.

கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேல் பேசியதாவது:


தமிழகத்தில், 10,364 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அதில், 8,500 மெகாவாட் மின் உற்பத்தி மட்டுமே செய்யப்படுகிறது. ஆனால், 11,500 முதல் 12,500 மெகாவாட் வரை தேவையாக உள்ளது. மத்திய மின் உற்பத்தி திட்டங்களான, என்.எல்.சி., பெல், என்.டி.பி.சி., ஆகியவற்றின் மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவ தாமதமாவதே பற்றாக்குறைக்கு காரணம்.

மின் உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் உள்ள இடைவெளியை நிறைவு செய்ய, புதிய திட்டங்கள் செயல்படுத்தினாலும், ஆண்டுக்கு, ஆண்டு தேவை அதிகரிப்பதால், பற்றாக்குறை தொடர்ந்து அதிகரிக்கும். தற்போதைய மின் உற்பத்தியில், 80 சதவீதம் வரை அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தியாகிறது. இதற்கான, நிலக்கரியை நாம் தொடர்ந்து பயன்படுத்தும்போது, எத்தனை காலம் தாங்கும் என தெரியாது; இதற்கு மாற்று, சூரிய சக்தி மின் உற்பத்தி மட்டுமே.

வெளிமாநிலங்கள் மற்றும் தனியாரிடம் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்கப்படுகிறது. விலைக்கு வாங்குவது, கொண்டு வருவது என பல செலவினங்கள் காரணமாக, 2011-12ல், 14,312.49 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும் 2.41 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வணிக நோக்கிலும், லாப நோக்கிலும் செயல்படவில்லை என்றாலும், இழப்புகளை சரிக்கட்ட, தற்போது முயற்சித்து வருகிறது. இதற்கு ஒரே தீர்வாக புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளான, சோலார், கழிவுகளில் இருந்து மின் உற்பத்தி (பயோ மாஸ் காஸிபயர்) ஆகியவற்றை பயன்படுத்துவதே சிறந்தது.

தொழிற்சாலை உரிமையாளர்கள், இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். சூரிய சக்தி மின் உற்பத்தி சிறந்ததாக இருக்கும். மத்திய, மாநில அரசுகள், மானியம் வழங்குவதோடு, வங்கிகளும் கடன் வசதிகள் செய்து தருகின்றன.

சூரிய ஒளி மின் உற்பத்தி கலன் அமைக்கும்போது, சரியான நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். மின் சக்தி கலன்களை தினமும் முறையாக பராமரித்தால், துவக்கம் முதல் 35 ஆண்டு வரை சீராக மின்சாரம் கிடைக்கும். வணிக நோக்கத்தில் அமைத்து, இதன் மூலம் அதிகளவு வருமானத்தை ஈட்டலாம். 2013க்குள் 1,000 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 180 மெகாவாட் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. எனவே, தொழிற்சாலை உரிமையாளர்கள் விரைவில் நிறுவ முன்வர வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா, கோட்ட பொறியாளர் சுப்ரமணியம், திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்கள் , மின் பகிர்மான கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments: