நெய்வேலி: கடந்த ஆண்டைவிட கூடுதலாக 113 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி : என்.எல்.சி., சேர்மன் தகவல்


நெய்வேலி: ""என்.எல்.சி., நிறுவனத்தில் கடந்த ஆண்டைவிட 113 கோடி யூனிட் மின்சாரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது' என சேர்மன் சுரேந்தர்மோகன் பேசினார். என்.எல்.சி., நிறுவனத்தின் முக்கிய அங்கமாக திகழும் முதல் அனல்மின் நிலையத்தின் முதல் மின் உற்பத்தி பிரிவு 1962ம் ஆண்டு மே 23ம் தேதியும், இரண்டாவது மின் உற்பத்தி பிரிவு 1963ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதியும் தொடங்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து படிப்படியாக ஒவ்வொரு பிரிவிலும் மின் உற்பத்தி தொடங்கி இறுதியாக 9வது மின் உற்பத்தி பிரிவு 1970ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கியது.

முதல் அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 600 மெகாவாட் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர இதர அனல்மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் 2,140 மெகாவாட் மின்சாரத்தில் "கிரிட்' வாயிலாக அதிகபட்ச மின்சாரமும் தமிழகத்திற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தரச்சான்றுகள் பெற்று தென்னிந்தியாவின் மிகப்பெரிய அனல்மின் நிலையம் என்ற அந்தஸ்துடன் மின் உற்பத்தியில் இன்னமும் சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்த அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி பிரிவு 50 ஆண்டுகளை நிறைவு செய்து சர்வதேச அளவிலான சாதனை புரிந்துள்ளது.

இதற்கிடையே, மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் இந்த அனல்மின் உற்பத்தி பிரிவின் நினைவுப் பூங்காவை என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகன் நேற்று திறந்து வைத்து பேசுகையில், "நேற்றைய நிலவரப்படி, என்.எல்.சி., அனல்மின் நிலையங்கள் 1,790 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே கால அளவை ஒப்பிடுகையில் இது 113 கோடி யூனிட் அதிகமாகும். வரும் நிதியாண்டிலும் (2012-13) என்.எல்.சி., அனல்மின் நிலையங்கள் மின் உற்பத்தியில் புதிய சாதனையை நிகழ்த்தும் என்பதில் ஐயமில்லை' என்றார்.

நிகழ்ச்சியில் என்.எல்.சி., இயக்குனர்கள் கந்தசாமி, மகிழ்ச்செல்வன், ராகேஷ்குமார், ராஜகோபால், செயல் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, பொது மேலாளர் ரவீந்திரன் நாயர் உட்பட உயரதிகாரிகள் பலர் பங்@கற்றனர்.

No comments: