சீரான மின் வினியோகத்தை தர அரசு 5,000 மின்மாற்றிகளை வாங்க நடவடிக்கை தினமலர் செய்தி



சென்னை:அடிக்கடி தடை ஏற்படாமல், சீரான மின் வினியோகத்தை தருவதற்காக, 5,000 மின்மாற்றிகளை கொள்முதல் செய்வதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்காக 78 கோடி ரூபாயை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒதுக்க முன்வந்துள்ளது.
தமிழகத்தில், 4,000 மெகா வாட் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின் பற்றாக்குறையால், சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், பல மணி நேரம் மின்வெட்டு, அமலில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களில், தினசரி மின் பயன்பாடு, 30 சதவீதம் அதிகரித்து உள்ளது.கோடை காலம் மார்ச் இரண்டாம் வாரம் வரை, அதிக வெப்பம் இருக்காது என்பதால், இக்கால கட்டத்தில், மின் பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால், மாநிலத்தில் மின் வெட்டு நேரமும் தற்போது குறைந்திருந்தது.

அடுத்த சில நாட்களில், கோடை காலம் துவங்குவதால், மின் நுகர்வின் அளவு மேலும் அதிகரிக்கும். மின் நுகர்வு அதிகரிப்பால், நீண்ட நேர மின் வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
கோடையில் ஏற்படும் அதிக மின் நுகர்வையும் சரி செய்ய, ஜனவரி முதல், ஜூன் மாதம் வரை, ஒடிசாவில் இருந்து, 500 மெகா வாட் மின்சாரத்தை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது என, கவர்னர் உரையில் அரசு தெரிவித்து இருக்கிறது. கொள்முதல் இந்நிலையில், சீரான மின் வினியோகத்தை செய்வதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, 5,000 புதிய, "டிரான்ஸ்பார்மர்களை' (மின்மாற்றி) மின் வாரியம் கொள்முதல் செய்கிறது. மாநிலம் முழுவதும், தற்போது 2.12 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உள்ளன. மின் நிலையங்களில் இருந்து, துணை மின் நிலையங்களுக்கு, மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. 
அதன் பின், ஆங்காங்கே உள்ள மின்மாற்றி மூலம் பயன்பாட்டிற்கு மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், மின் இணைப்புகளை கூடுதலாக தருவதால், குறைந்த மின் அழுத்தம் மற்றும் அதிக மின் அழுத்தம் பிரச்னை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, ஆற்றல் செயல்திறன் மிக்க, 5,000 வினியோக மின்மாற்றிகள் கொள்முதலுக்கான, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றம் இதுகுறித்து, மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும், 2.32 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். மின் இணைப்புகளுக்கு ஏற்ப, மின்மாற்றி இல்லாததால், சீரான மின் வினியோகம் செய்வதில் சிரமம் உள்ளது. குறைந்த மின்னழுத்த பிரச்னை, கோடை காலங்களில் அதிகமாக இருக்கும். இதற்கு தீர்வு காண, புதிய மின்மாற்றிகளை கொள்முதல் செய்ய, மின் வாரியம் ஒப்பந்தம் கோரிஉள்ளது. புதிய நவீன தொழில்நுட்பத்தில், இவை இயங்கும். அதாவது, குறைந்த மின்னழுத்தம் மற்றும் அதிக மின்னழுத்தப் பிரச்னை ஏற்படும் போது, தானாகவே மின் வினியோகத்தை நிறுத்திக் கொள்ளும். அதேபோல், மின்னல், மழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, இவை, மின் வினியோகத்தை தானாகவே நிறுத்திக் கொள்ளும். விண்ணப்பங்கள் பின்னர், மின் வாரிய ஊழியர்கள் வந்து,"ஆன்' செய்தால் தான் இயங்கும். இதற்காக, 5,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஒப்பந்தப்புள்ளி, வரும், 8ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். விண்ணப்பங்கள் பெற்று முடிவு செய்த பின், மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கு பின் நிறுவப்படும் என்று தெரிகிறது.

No comments: