தென்னிந்தியாவை முழுமையாக தேசிய மின்பாதையில் இணைப்பதில் தாமதம் ஏற்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியா முழுவதற்குமாக ஒரே மின்பாதையில் மின்சாரம் விநியோகிக்கும் வகையில் தேசிய மின்பாதையை 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியில் மின் பற்றாக்குறை ஏற்பட்டாலும் அப்பகுதிக்கு உடனடியாக கூடுதல் மின்சாரம் வழங்க முடியும். தேசிய மின் பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய மின் ஆணையம் மேற்பார்வையிட்டு வருகிறது. தேசிய மின் பாதையை நிச்சயித்த காலக் கெடுவுக்குள் இணைப்பதில் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்று கூறப்படவில்லை. கர்நாடக மாநிலத்தில் ராய்ச்சூர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷோலாப்பூர் ஆகிய இடங்களுக்கு இடையே உள்ள மின் விநியோக அமைப்பை இணைத்துவிட்டால் ஒட்டுமொத்த தென்னிந்திய மின் தொகுப்பும் தேசிய மின் பாதையுடன் இணைக்கப்பட்டுவிடும் என பவர் கிரிட் கார்ப்பரேஷன் கூறியுள்ளது. தேசிய அளவில் மின் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமானது.
ஷோலாப்பூர்-ராய்ச்சூர் மின் பாதை இணைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன. திட்டமிட்டபடி இது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் பூர்த்தியாகாது என பவர் கிரிட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு ஜூலையில்தான் மின்தொகுப்பு இணைப்பு பணிகள் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரக் கூடும் எனத் தெரிகிறது. தேசிய மின் பாதை என்பது, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என ஐந்து பிராந்தியங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பிராந்திய மின் பாதையைத் தவிர மற்ற நான்கு மின் பாதைகளும் 2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஒரே மின்னலையில் செயல்பட்டு வருகின்றன. இதனை பவர் கிரிட் கார்ப்பரேஷன் செயல்படுத்தி வருகிறது. 95 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள மின் இணைப்புகளை இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
தற்போது தென்னிந்திய மின் தொகுப்பு உயரழுத்த நேரடி மின்னோட்ட அடிப்படையில் தேசிய மின் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய மின் பாதை செயல்பட்டு வரும் மின்னலை அல்லாத வேறொரு மின்னலையில் இது செயல்பட்டு வருகிறது.
சில மாநிலங்கள் வழக்கத்தைவிட அதிகமாக மின்சாரம் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் மிகப் பெரிய மின்சார விநியோக பிரச்னை உருவானது. இதனால் வடக்கு, கிழக்கு, வட கிழக்கு மின் தொகுப்புகள் முடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்பற்றாக்குறையைப் போக்க இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து மின்சாரம் விநியோகிப்பதில் சிக்கல் இருந்து வருவதற்கும் தேசிய மின் பாதை அமைப்பு பணி பூர்த்தி அடையாததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
THANKS To dinamani
No comments:
Post a Comment