ஜூன் வரை பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும் : தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் தகவல்


 "வரும் ஜூன் மாதம் வரை, பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும்' என, தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், 2013-14ம் ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு பரிந்துரையை, தமிழக மின் வாரியம் சமர்ப்பித்துள்ளது. மத்திய மின் தீர்ப்பாயம் உத்தரவின்படி, தமிழக மின் வாரியம், மின் கட்டண உயர்வு பரிந்துரையை, நவம்பர், 30ம் தேதியிலேயே, ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்க வேண்டும்
.

உத்தரவுப்படி, மின் வாரியம் கட்டண உயர்வு பரிந்துரையை சமர்பிக்கவில்லை. ஒழுங்குமுறை ஆணைய அறிவுறுத்தலின்பேரில், பிப்ரவரி, 19ம் தேதி மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரையை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் சமர்ப்பித்தன. அதனுடன், 81 நாள் தாமதமாக பரிந்துரையை சமர்ப்பித்ததற்கான காரணத்தையும் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. பரிந்துரைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு குறித்து, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற இருந்த நிலையில், மின் ஒழுங்கு முறை ஆணைய உறுப்பினர்கள் நாகல்சாமி, வேணுகோபால் ஆகியோர் நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், புதிய மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உள்ளது.

தமிழக மின் தொடரமைப்பு கழகத்தின் புதிய மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை, ஆணையம் வெளியிடும் வரையிலோ அல்லது ஜூன், 20ம் தேதி வரையிலோ, தற்போதுள்ள மின் கட்டணமே அமலில் இருக்கும். மேலும், இந்த மனுக்களின் மீதான விசாரணையும் முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு கூறியுள்ளனர்.

No comments: