பணி மாறினாலும் ஒரே பி.எப்., கணக்கு எண்:புதிய வசதி விரைவில் அறிமுகம்


புதுடில்லி:அடிக்கடி வேலை மாறுவோருக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.,) கணக்கை, புதிய நிறுவனத்தில் தொடருவது, பெரும் பிரச்னையாக உள்ளது. இதையடுத்து, பணி மாறினாலும், ஒரே பி.எப்., கணக்கை தொடரும் வகையில், புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

காலதாமதம்:பழைய இ.பி.எப்., கணக்கையே, வேலைக்கு சேரும், புதிய நிறுவனத்திலும் தொடர, படிவம்-13ஐ பூர்த்தி செய்து, சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான, நடைமுறைகளில் ஏற்படும் காலதாமதம், அலைச்சல் ஆகியவற்றை கருதி, பலர், பழைய கணக்கை முடித்துக் கொண்டு, பணத்தை பெற்று விடுகின்றனர்.மேலும் சிலர், பழைய கணக்கை முடிக்காமல், அப்படியே விட்டு விடுகின்றனர். வேலைக்கு சேரும் புதிய நிறுவனம் மூலம், புதிதாக மற்றொரு, இ.பி.எப்., கணக்கை துவக்கி விடுகின்றனர்.

இது போன்ற செயல்பாடுகளால், ஒருவர், பணி ஓய்வின் போது பெறும் தொகை மிகச் சொற்பமாகவே உள்ளது.பணியாளர்களின் வாழ்நாள் பாதுகாப்பிற்காக உருவாக்கிய ஓய்வூதியக் கொள்கைக்கு முரணாக, இத்தகைய போக்கு காணப்படுகிறது. இதை தடுக்கும் நோக்குடன், வருங்கால வைப்பு நிதி கணக்குகளை கணினி மயமாக்குதல், நிதியத்தின் கிளைகளை மின்னணு தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைத்தல், ஆன்-லைன் விண்ணப்பம் உள்ளிட்ட, வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆலோசனை:இதையடுத்து ஒரு நிறுவனத்தில் இருந்து, வேறொரு நிறுவனத்தில் பணிக்கு சேரும் ஒருவர், பழைய இ.பி.எப்., கணக்கு எண்ணிலேயே, புதிய நிறுவனத்தில், இ.பி.எப்., கணக்கை தொடருவதற்கான, வசதி செய்யப்பட உள்ளது.இதனால், ஒருவர் தமது பழைய, இ.பி.எப்., கணக்கை, இடையிலேயே முடித்துக் கொண்டு பணம் பெறுவது அல்லது கணக்கை முடிக்காமல் விடுவது போன்றவை, பெருமளவு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பணிகளை செயல்படுத்துவதற்காக, இந்திய தொழில்நுட்ப மையம் (டில்லி) மற்றும் இந்திய மேலாண்மை மையம்(ஆகமதாபாத்) ஆகியவற்றிடம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம், ஆலோசனை கேட்டுள்ளது.இதையடுத்து, பணி மாறும் தொழிலாளர்கள், தங்கள் பழைய இ.பி.எப்., கணக்கு எண்ணை, வேலைக்கு சேரும், புதிய நிறுவனத்தில் தெரிவித்து, அதே எண்ணில், வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யும் வசதி, சில மாதங்களில், அறிமுகமாக உள்ளது.இதில், பணியாளரின் பழைய, இ.பி.எப்., கணக்கை, அவர் சேரும் புதிய நிறுவனமே, அதன் புதிய இ.பி.எப்., கணக்குடன், இணைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளும்.

தகவல் தொகுப்பு:இதனால், கணக்கை மாற்றுவது, தொடர்பான பிரச்னைகளில் இருந்து பணியாளர்கள் விடுபடுவர்.இத்துடன், நடப்பு ஆண்டிற்குள், அனைத்து இ.பி.எப்., கணக்குகளையும் ஒருங்கிணைத்து, தகவல் தொகுப்பை உருவாக்கி, ஒவ்வொரு சந்தாதாரருக்கும் பிரத்யேக எண்ணை வழங்கவும், மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.இதன் மூலம், ஒருவர் எந்த நிறுவனத்திற்கு மாறினாலும், அங்கு தமது இ.பி.எப்., கணக்கு எண்ணை, தெரிவித்தால் போதும். 

அந்த கணக்கில், அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும், இ.பி.எப்., தொகையுடன், நிறுவனத்தின் பங்களிப்பும் சேர்த்து, வரவு வைக்கப்படும்.இந்தியாவில், ஐந்து கோடி பணியாளர்களின், 3.50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை, இ.பி.எப்., அலுவலகம் பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோரப்படாத தொகை ரூ.22,636 கோடி:தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில், கடந்த மூன்று ஆண்டுகளாக, 22,636 கோடி ரூபாய், சந்தாதாரர்களால் கோரப்படாமல் உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் கோரப்படாமல் உள்ள தொகைக்கு, வட்டி அளிக்கப்பட மாட்டாது.இந்த விதிமுறை, கடந்த, 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளது. கோரப்படாத தொகையில், மகாராஷ்டிரா மாநிலம், 7,427 கோடி ரூபாய் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், தமிழகம் (2,433 கோடி ரூபாய்), ஆந்திரா (1,797 கோடி ரூபாய்) ஆகிய, மாநிலங்கள் உள்ளன.

No comments: