"ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம்' பயனாளிகளுக்கு மின்வாரியம் "கட்டுப்பாடு' தினமலர் செய்தி

ராமநாதபுரம்:தமிழக மின்வாரியத்தின் கிடுக்குப் பிடியால், "ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம்' பயனாளிகள், பெரும்பாலானோர் மீட்டர் பெட்டி பொருத்தி, மின் இணைப்பு துண்டிப்பை தவிர்த்து வருகின்றனர்.தமிழக மின் வாரியம் மூலம் "ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம்' செயல்பட்டு வருகிறது. அதன்படி, குடிசை வீடுகள் மற்றும் அரசு சார்பில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு இலவச மின்சாரம்( ஒரு பல்ப் மட்டும்) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.


துவக்கத்தில் இத்திட்டத்தின்படி பயனாளி ஒருவர் ஒரு பல்ப் மட்டுமே பயன்படுத்தி வந்தார். பின், தி.மு.க., ஆட்சியில், "டிவி' க்கும் இந்த திட்டம் பொருந்தும் என, அரசு அறிவித்தது. இதனால், இப்பயனாளிகள் "டிவி'யையும் இலவச மின்சாரத்தில், பார்த்து ரசித்து வந்தனர்.
"கிடுக்குப்பிடி' : இவர்களுக்கு, மின் தட்டுப்பாடு அதிகரிப்பு, சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதால் இலவச மின்சாரத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து மின்வாரியம் தற்போது, அதிரடியாக ஒரு குடிசைக்கு ஒரு விளக்கு திட்டம் பயனாளிகளை கண்டறிந்து, அவர்களிடம் மீட்டர் பெட்டி அவசியம் என கட்டாயப்படுத்துகிறது. தவறும் பட்சத்தில், மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும், எச்சரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள், மீட்டர் இணைத்து நுகர்வோராக மாறிவருகின்றனர்.

ராமநாதபுரம் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இம்மாவட்டத்தில் 20 ஆயிரத்து 156 பயனாளிகள் உள்ளனர். மின்தட்டுப்பாடு அதிகமுள்ள இக்கால கட்டத்தில் திட்ட பயனாளிகள் பல்பு, "டிவி' மட்டுமின்றி பல மின்சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்துவதால் மின்வாரியத்திற்கு இழப்பு அதிகரித்து வருகிறது. சிக்கனம் கருதி, இதைக் கட்டுப்படுத்த, பயனாளிகளின் வீடுகளை ஆய்வு செய்து வருகிறோம். விதி மீறுவோரிடம் மீட்டர் பொருத்தி, கட்டணம் செலுத்த அறிவுறுத்தி வருகிறோம்.
தவறும் பட்சத்தில், இணைப்பு துண்டிக்கப்படும் என, எச்சரித்துள்ளோம். சில பயனாளிகள், தாங்களாகவே முன்வந்து மீட்டர் பொருத்தி வருகின்றனர். வரம்பு மீறிய 20க்கும் மேற்பட்டோரின் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும், என்றார்.

ரூ.20 கோடி நஷ்டம்:மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""யாருமே 40 யூனிட் மட்டுமே பயன்படுத்துவதில்லை. 120 யூனிட்டிற்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர். இலவசம் என்பதால், ஆண்டிற்கு 20 கோடி ரூபாய் வரை, வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே, கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் இந்த பயனாளிகளிடம், மின் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.

No comments: