ஆந்திராவில் மின் கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து கட்சிகள் போராட்டம்


ஆந்திர மாநிலத்தில் மின் கட்டணம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு நாளை (1-ந்தேதி) முதல் அமுலுக்கு வருகிறது. முதல் 50 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.60 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 51 முதல் 100 யூனிட்வரை ரூ.3.25-ம் 101 முதல் 150 யூனிட் வரை ரூ.4.88-ம், 151 முதல் 200 யூனிட் வரை ரூ.5.63-ம் 201 முதல் 250 யூனிட் வரை ரூ.6.38, 251 முதல் 300 யூனிட் வரை ரூ.6.88-ம், 301 முதல் 400 யூனிட் வரை ரூ.7.38-ம், 401 முதல் 500 யூனிட் வரை ரூ.7.88-ம், 501 யூனிட்டுக்கு மேல் ரூ.8.38 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த மின் கட்டண உயர்வுக்கு ஆந்திர மாநிலம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. மின் கட்டண உயர்வு பற்றி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது முதலே எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த தொடங்கி விட்டன. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள் கடந்த 1 மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றன. 

கடந்த வாரம் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். 4 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின் வாரிய அலுவலங்களில் முற்றுகை போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். 

தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடந்த 26-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று உண்ணாவிரதம் இருந்த 10 எம்.எல்.ஏ.க்களின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து போலீசார் எம்.எல்.ஏ.க்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தற்போது மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், முன்னாள் மந்திரிகள் மற்றும் தொண்டர்கள் நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். பழைய எம்.எல்.ஏ. விடுதியில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

No comments: