மரபு சாரா மின் உற்பத்தி இலக்கு எட்ட வாய்ப்பில்லை



புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சகம், காற்றாலை மின் திட்டங்கள் மூலம், 2,500 மெகா வாட்டும், சூரிய சக்தி மூலம், 800 மெகா வாட்டும் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.ஆனால், பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், காற்றாலை வாயிலாக, கூடுதலாக, 1,282 மெகா வாட் அளவிற்கும், சூரிய சக்தி மூலம், 505 மெகா வாட் அளவிற்கே மின் உற்பத்தி செய்யும் வகையில், திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எனவே, நடப்பு நிதியாண்டில், இவ்வகையிலான மின் உற்பத்தி இலக்கை எட்ட வாய்ப்பில்லை என, தெரியவந்துள்ளது.உற்பத்தி திறன்:சென்ற பிப்ரவரி மாத நிலவரப்படி, நாட்டின் காற்றாலை மின் உற்பத்தி திறன், 18,635 மெகா வாட்டாகவும், சூரிய சக்தி வாயிலான மின் உற்பத்தி திறன், 1,446 மெகா வாட்டாகவும் உள்ளது.


தேசிய எரிசக்தி அமைப்பு, 340 மெகா வாட் மின் உற்பத்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டங்கள் இம்மாதம் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற பிப்ரவரியில், சூரிய சக்தி வாயிலாக, 210 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. மேலும், நடப்பு மார்ச் மாதத்தில், சூரிய சக்தி வாயிலாக, 130 மெகா வாட் மின் உற்பத்தி மேற்கொள்ள வாய்ப்புள்ளது என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், நடப்பு நிதியாண்டில், சூரிய சக்தி வாயிலான மின் உற்பத்தி இலக்கை ஓரளவிற்கு எட்டமுடியும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், காற்றாலை திட்டங்கள் வாயிலாக, கூடுதல் மின் உற்பத்தி மேற்கொள்ள வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது. ஏனெனில், மத்திய அரசு, உற்பத்தி அடிப்படையில் வழங்கி வந்த, ஊக்கத் தொகை மற்றும் தேய்மான செலவு குறைப்பு திட்டங்களை விலக்கி கொண்டது.ஊக்குவிப்பு தொகை:இருப்பினும், மேற்கண்ட இரண்டு ஊக்குவிப்பு திட்டங்களும், மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கு எடுத்துக்காட்டாக, வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகைக்காக, 800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டு உள்ளது.இந்நிலையில், பல மாநில அரசுகள், சூரிய சக்தி வாயிலான மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. எனவே, வரும் நிதியாண்டில், நாடு தழுவிய அளவில், சூரிய சக்தி வாயிலான மின் உற்பத்தி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click