காற்றாலை மின் உற்பத்தி கைவிட்டதால் மின்தடை நேரம் அதிகரிப்பு

நாகர்கோவில்,குமரி மாவட்டத்தில் தற்போது 10 முதல் 12 மணி நேரம் வரை மின்தடை நிலவுகிறது. ராதாபுரம், பழவூர், முப்பந்தல், கயத்தாறு, கோவை போன்ற பகுதிகளில் செயல்படும் காற்றாலைகள் முடங்கியதால் மின்தடை நேரம் அதிகரித்துள்ளது. பருவமழையின்மை காரணமாக மின் தட்டுப்பாடு நிலவி வந்த சூழ்நிலையில் காற்று பலமாக வீசி வந்ததால் காற்றாலை மின்சாரம் சற்று கை கொடுத்து வந்தது. தற்போது காற்றின் வேகம் குறைந்துள்ளதால் காற்றாலைகளும் கைவிட்டுவிட்டது. 


தற்போது கோடைக்காலம் என்பதால் மின்சாதனங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப மின் உற்பத்தி இல்லாததால் மின்தடை நேரம் அதிகரித்து விட்டது. 

தென்மேற்கு பருவக்காலங்களில் அதிக மின்உற்பத்தி காற்றாலைகள் மூலம் கிடைக்கும். அந்த சமயம் ஒரு நாளைக்கு 7000 மெகாவாட் வரை மின் உற்பத்தி நடைபெறும். தற்போது வடகிழக்கு பருவக்காற்று காலமாகும். 

வழக்கமாக வடகிழக்கு பருவக்காற்றை வலுவிழந்த காற்று என்று அழைப்பார்கள். காரணம் இந்த காலக் கட்டங்களில் காற்றாலைகளில் மின் உற்பத்தி குறைவாகவே இருக்கும். ஆனால் இந்த ஆண்டு காற்றின் வேகம் மிகவும் குறைந்ததால் மின் உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. 

இதுபற்றி காற்றாலை என்ஜினீயர் ஜெயக்கண்ணன் கூறியதாவது:- 

சீசன் நேரங்களில் 6 ஆயிரம் மெகாவாட் முதல் 7 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைக்கும். தற்போது காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் வெகுவாக குறைந்து விட்டது. நேற்று முன்தினம் 29 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்தது. அது நேற்று ஒரு மெகாவாட்டாக மிகவும் குறைந்தது. இன்று காலை 10 மெகாவாட்டாக சற்று உயர்ந்தது. 

காற்றின் வேகம் அதிகரித்தால் மட்டுமே மின் உற்பத்தி உயர வாய்ப்பு உள்ளது. காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் மின்தடை நேரமும் அதிகரித்து விட்டது. ஏப்ரல் மாதம் கடைசி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் மின்வெட்டு குறைய வாய்ப்பு உள்ளது. அப்போது தென்மேற்கு பருவகாற்று காரணமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

No comments: