புதிய பென்சன் திட்டத்தை கைவிடக்கோரி ஏப்ரல் 10-ந் தேதி உண்ணாவிரதம்: மாநிலத் தலைவர் திருப்பூரில் பேட்டி

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் காந்திநகர் எம்.சி.மஹாலில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:- 


தமிழகத்தில் அரசுத்துறையில் துறைவாரியாக உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். தற்போது காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தாலும் இன்னும் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இல்லாமல் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பக்கூடிய தோட்ட தொழிலாளர்கள், அலுவலக உதவியாளர், கழிப்பறை பணியாளர் பணியிடங்கள் கூட சரிவர நிரப்பப்படவில்லை. சுமார் 20 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் தாழ்த்தப்பட்ட, அடித்தட்டு மக்கள் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். 

அரசு ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டம் கைவிடப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தனர். ஆனால் அரசு பொறுப்பேற்ற இதுநாள் வரையிலும் அரசு ஊழியர் சங்கத்தை அழைத்து பேசி கருத்து கேட்கவில்லை. இதுவரை 40 கடிதங்கள் முதல்அமைச்சருக்கு அனுப்பி விட்டோம். 

புதிய பென்சன் திட்டத்தை கைவிடக்கோரியும், ஊதிய முரண்பாடு குழு அறிக்கை குறித்து பேசி முடிவு எடுக்க முதல்அமைச்சர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 10ந் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மண்டல அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. 

இதில் அரசு ஊழியர்கள் அன்று ஒருநாள் விடுப்பு எடுத்து உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்கள். இதன் மூலம் அரசு பணிகள் அன்று முடங்கும். 

இவ்வாறு தமிழ்செல்வி கூறினார்.

No comments: