எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டணம் விவரம்: விரைவில் அறிமுகப்படுத்த முடிவு


மின் நுகர்வோருக்கு, மின் கட்டண விவரங்களை, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரியப்படுத்த, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், வீடு, 1.63 கோடி; விவசாயம், 20.30 லட்சம்; வணிக பயன்பாடு, 33 லட்சம்; தொழிற்சாலை, 5.77 லட்சம் என, மொத்தம், 2.44 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். மின் கட்டணம் குறித்த விவரம், கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 நாட்களுக்குள் கட்டணத் தொகையை பணம், காசோலை, வரைவோலை ஏதேனும் ஒன்றின் வாயிலாக செலுத்த வேண்டும். மின் வாரிய ஊழியர்கள், மின் கட்டணத் தொகை கணக்கெடுப்பதற்கு வீடு, நிறுவனங்களுக்கு செல்லும் போது, பெரும்பாலான நுகர்வோர், வீடுகளில் இருப்பதில்லை. இதனால், மின் பயன்பாடு மற்றும் மின் கட்டணம் குறித்த தகவலை, நுகர்வோர் பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதன் காரணமாக, உரிய காலத்திற்குள் கட்டணத்தை செலுத்த தவறி விடுகின்றனர். இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டணத்தை, நுகர்வோருக்கு தெரியப்படுத்த, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் படி, மின் பயன்பாடு, கட்டணம் மற்றும் செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள், எஸ்.எம்.எஸ்.,ல் இடம் பெற்றிருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, மின் இணைப்பு பெற விண்ணப்பித்த போது, மொபைல் போன் எண் கொடுத்தவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., சேவை வழங்கப்பட உள்ளது. மொபைல் எண் தெரிவிக்காதவர்கள், மின் கட்டணம் செலுத்துவதற்கு, துணை மின் நிலைய அலுவலகங்களுக்கு செல்லும் போது, நுகர்வோரிடம் இருந்து, மொபைல் போன் எண் பெறப்பட்டு, பின் தெரிவிக்கப்பட உள்ளது.

கட்டணம் இல்லை: இதுகுறித்து, மின் வாரிய ஊழியர் ஒருவர் கூறியதாவது: ஆறு மாதத்திற்கு முன், எஸ்.எம்.எஸ்., மூலம், நுகர்வோருக்கு, மின் கட்டணத்தை தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், எஸ்.எம்.எஸ்., கட்டணத்தை உயர்த்தியதால், இத்திட்டத்தை அப்போது செயல்படுத்த முடியவில்லை. எஸ்.எம்.எஸ்., சேவைக்காக நுகர்வோரிடத்தில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணி விரைவாக நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click