மின் விபத்தில் பாதிக்கப்படும் மின் ஊழியர், தனியார் மருத்துவமனையில், முன்பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற, செயற்பொறியாளர்,வாரியம் சார்பில் சான்று அளிப்பதற்கு, மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், ஒயர்மேன், உதவியாளர், மஸ்தூர், உதவி பொறியாளர், செயற்பொறியாளர்,மேற்பார்வை பொறியாளர், தலைமை பொறியாளர் என, 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மின் வாரிய ஊழியர்கள் அனைவருக்கும், காப்பீடு வசதி செய்யப்பட்டு உள்ளது. மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது, ஊழியருக்கு விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு திட்டத்தில் அனுமதிக்கப்பட்டமருத்துவமனையில் மட்டுமே, சிகிச்சை அளிக்கும் நிலை இருந்து வந்தது. மேலும், விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில், முன்பணம் செலுத்தினால் மட்டுமே, சிகிச்சை அளிக்கும் நிலை இருந்தது. மருத்துவ சிகிச்சையின் தீவிரம் மற்றும் அவசரம் கருதி, விபத்து ஏற்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில், முன்பணம் இல்லாமல் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழியர்கள், வாரியத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மின் விபத்தில் பாதிக்கப்படும் மின் ஊழியர், தனியார் மருத்துவமனையில், முன்பணம் செலுத்தாமல் சிகிச்சை பெற, செயற்பொறியாளர்,வாரியம் சார்பில் சான்று அளிப்பதற்கு, மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'முன்பணம் இல்லாமல், விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க, செயற்பொறியாளரே,வாரியத்தின் சார்பில், உறுதி சான்று அளிக்கலாம்' என்றார். இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் சங்க பொது செயலர் அசோக்குமார் கூறுகையில், 'பணியாளர் நலன் கருதி, மின் வாரியம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது" என்றார்
No comments:
Post a Comment