மின் மீட்டர் பழுது 4 லட்சம் ரூபாயை வழங்கியது மின் பகிர்மான கழகம்


கோவை:மின் மீட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக, கூடுதலாக வசூலிக்கப்பட்ட மின் கட்டணத்தில் 4 லட்ச ரூபாயை, மின் குறை தீர்ப்பாளர் உத்தரவின்பேரில், நுகர்வோருக்கு மின் பகிர்மானக்கழகம் திருப்பி வழங்கியது.கோவை, சின்னியம்பாளையத்தில் சிறு நூற்பாலை நடத்தி வருபவர் பாலசுப்ரமணியம்; வழக்கமாக, இவரது நூற்பாலைக்கான மின் கட்டணம், 2 லட்சம் ரூபாய்க்குள் வரும். ஆனால், கடந்த 2010 ஏப்ரலில் 10 லட்சத்து 33 ஆயிரத்து 203 ரூபாய், மின் கட்டணம் வந்தது. திடுக்கிட்ட பாலசுப்ரமணியம், காரணத்தை ஆராய்ந்தபோது, மின்மீட்டரில்பழுது காரணமென தெரிந்தது. மின் மீட்டரை சரி செய்ய, மின் பகிர்மானக்கழக உதவி செயற்பொறியாளருக்கு மனு கொடுத்தார்.

மீட்டர் பழுதானதால் கூடுதலாக வந்துள்ள கட்டணத்தை ரத்து செய்யுமாறும் கோரியிருந்தார். மின் மீட்டரில் பழுது ஏற்பட்டால், 30 வேலை நாட்களுக்குள் மாற்றித்தர வேண்டுமென்கிறது மின் வாரிய ஒழுங்கு முறை விதி; ஆனால், ஓராண்டாகியும் மீட்டரை மாற்றித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மின் மீட்டர் பழுதாகும்பட்சத்தில், கடைசியாக கணக்கிடப்பட்ட இரு மாத மின் அளவின் சராசரியை மட்டுமே கணக்கிட வேண்டும். இதன்படி, 2010 பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் பயன்படுத்திய தலா 32 ஆயிரம் யூனிட் மின்சாரத்தின் சராசரியை மட்டுமே கணக்கிட்டிருக்க வேண்டும்.ஆனால், 2009ல் மின் தடை இல்லாதபோது, ஒரே மாதத்தில் பயன்படுத்திய 52 ஆயிரம் யூனிட்டைக் கணக்கெடுத்து, அதையும் 11 மாதங்களுக்குக் கணக்கிட்டு, ஒரே ஆண்டில், கூடுதலாக 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை வசூலித்தது மின் பகிர்மானக்கழகம். இவற்றைத் தவிர்த்து, கூடுதலாக 6 லட்சத்து 18 ஆயிரத்து 482 ரூபாயைச் செலுத்துமாறு அறிவிக்கையும் அனுப்பியது. 
அதை அவர் செலுத்தாத காரணத்தால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது; வேறு வழியின்றி, அறிவிக்கையில் குறிப்பிட்ட தொகையையும் செலுத்தி, மீண்டும் மின் இணைப்பு பெற்றார் பாலசுப்ரமணியம்.
மின் கட்டண குளறுபடி குறித்த பல்வேறு விபரங்களை அவர் கேட்டதற்கு பலன் இல்லை. இது குறித்து, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பில் தகவல் தெரிவித்தார். அவரது சார்பில், கோவை மின் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை மின் நுகர்வோர் குறை தீர் மன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின், சென்னையிலுள்ள மின் குறை தீர்ப்பாளரிடம்(தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி ஆம்புட்ஸ்மேன்) கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு மேல்முறையீடு செய்தது.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மின் குறை தீர்ப்பாளர் தர்மராஜ், "மின் மீட்டர் பழுதான காலத்தின் சராசரியைக் கணக்கிட்டு, மின் பயனீட்டளவை கணக்கிட வேண்டும். அதற்கு அதிகமாக, வசூலிக்கப்பட்ட கட்டணத்தை அடுத்தடுத்த மின் கட்டணங்களில் சரி செய்ய வேண்டும்; அல்லது திரும்ப வழங்க வேண்டும்,' என்று உத்தரவிட்டார். மீட்டரை மாற்றுவதற்கு ஏற்பட்ட கால தாமதத்துக்கு இழப்பீடாக 1000 ரூபாய் வழங்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தினார். உத்தரவை ஒரு மாதத் துக்குள் அமல்படுத்துமாறும் தீர்ப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.ஆனால், மின் பகிர்மானக்கழக அதிகாரிகள், உத்தரவை அமல் படுத்தாமல் இழுத்தடித்தனர். இதனால், தீர்ப்பாளரின் உத்தரவை அமல்படுத்தாத அலுவலர் மீது, மின்சார சட்டம் 2003 பிரிவு 142ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மின் குறை தீர்ப்பாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் எதிரொலியாக, அபராதமாக கணக்கிட்ட தொகையைத் தவிர்த்து, மீதமுள்ள 4 லட்சத்து 9 ஆயிரத்து 983 ரூபாயை பாலசுப்ரமணியத்துக்கு சொந்தமான மின் இணைப்பில் பயன் படுத்திய கட்டணத்தில் வரவு வைத்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகை, மின் பகிர்மானக்கழகத்தால் திருப்பித்தரப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...