வட மற்றும் தென் இந்திய மின் தொகுப்புகள் வரும் 2014, மார்ச் மாதத்துக்குள் இணைக்கப்படும் என்று இந்திய மின் பரிவர்த்தனை கழகத்தின் மண்டலத் தலைவர் தேவேஷ் சிங் தெரிவித்தார்.
பொறியாளர் சங்கம் தமிழ்நாடு பிரிவின் சார்பில் மின்துறையில் சமீபகால போக்கு மற்றும் தரம் தொடர்பான தேசிய கருத்தரங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று தேவேஷ் சிங் பேசியது:
வட இந்தியாவில் மின் உற்பத்தி மிக அதிகமாகவும், தேவை குறைவாகவும் உள்ளது. ஆனால், தென் இந்தியாவில் மின் தேவை உற்பத்தியை விட அதிகமாக உள்ளது.
வட மற்றும் தென் இந்திய மின் தொகுப்புகள் முழுமையாக இணைக்கப்படாததால், உபரி மின்சாரத்தை தேவைப்படும் இடங்களுக்கு வழங்குவதில் சிரமம் உள்ளது.
இப்போது, 765 கிலோவாட் திறன் கொண்ட இரண்டு மின் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வட மற்றும் தென் இந்திய மின் தொகுப்புகளுக்கான முதல் மின் பாதை மார்ச் மாதத்துக்குள் இணைக்கப்பட்டுவிடும். இரண்டாவது மின் பாதை ஜூன் மாதத்துக்குள் இணைக்கப்பட்டுவிடும்.
இந்த இரண்டு மின் பாதைகளும் இணைக்கப்பட்டுவிட்டால், 4000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் வட மின் தொகுப்பிலிருந்து தென்னக மின் தொகுப்புக்கு விநியோகிக்க முடியும்.
மின்சார சந்தை:
ஒரு மெகாவாட் மின்சாரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வரை வாங்குவதற்காக இணையதளம் மூலம் செயல்படும் மின்பரிவர்த்தனை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் உற்பத்தி செய்பவர்களும் மின்சாரம் தேவைப்படுவோரும் இங்கு மின்சாரத்தை விற்கலாம்; வாங்கலாம்.
ஆனால் இங்கு மின்சாரத்தை வாங்குவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள மின்வாரியங்களின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் கே.வேணுகோபால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் சங்கர நாராயணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பேசினர்.
No comments:
Post a Comment