அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் நடக்கும் நேர்காணலில் நேற்று 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பி.இ படிப்புகளை படிப்பதே அரிதாக இருந்த காலம் போய், தற்போது தரமான கல்லூரியை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தொழிற்பயிற்சி மேற்கொள்ள தரமணியில் இயங்கி வரும் தொழில்பயிற்சி வாரியத்தில் ஆண்டுதோறும் பதிவு செய்து வருகின்றனர்
இதன் மூலம் மாணவர்களின் படிப்புக்கு ஏற்றவாறு தொழில் நிலையங்களுக்கு தேர்வு செய்யப் பட்டு அனுப்பப்படுகிறார்கள். மாதந்தோறும் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்பயிற்சி பெற மாணவர் களை தேர்வு செய்யும் பணி சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. 28ம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்துகொள்ள நேற்று மட்டுமே 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர்.
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு டி.இ.இ.இ, பி.இ எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை உட்பட 7 மண்டல மாணவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, மதிப்பெண், ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அவர்களுக்கு அனல் மின்நிலையங்கள், நீர் மின்நிலையங்கள், மின் பகிர்மானம், அலுவலகங்களில் தலா 3 மாதங்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படும். இது வேலைவாய்ப்பு பெற உதவியாக இருக்கும். முன்பு நூற்றுக்கணக்கில் தான் விண்ணப்பங்கள் இருக்கும். ஆனால், இப்போது சென்னை மண்டலத்தில் மட்டுமே 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர்’’ என்றனர். மாணவர்களிடம் கேட்டபோது, ‘‘பி.இ. படித்து முடித்தவுடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளோம். அதன்படி, எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த பயிற்சி சான்றிதழ், தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு பெற கூடுதல் தகுதியாக இருக்கும். படித்து முடித்த 2 வருடத்திற்குள் மட்டுமே இந்த பயிற்சி பெற முடியும். பயிற்சி பெறும் போது, பி.இ படித்தவர்களுக்கு மாதம் ரூ.3,560, டி.இஇஇ படித்தவர்களுக்கு மாதம் ரூ.2,530 மத்திய அரசு ஊக்க தொகையாக கிடைக்கும்’’ என்றனர். http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=63606 |
No comments:
Post a Comment