சீரான மின்சாரம் வழங்கவும், மின் இழப்பை குறைக்கவும், மின்சார வாரியம், 3,696 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய அரசு, 2008ல், "திருத்தி அமைக்கப்பட்ட விரைவுப்படுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டம் (ஆர்-ஏ.பி.டி.ஆர்.பி.,),' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் நோக்கம், மின் நுகர்வோருக்கு, தரமான மின்சாரத்தை சீரான முறையில் வினியோகம் செய்தல் மற்றும் மின் இழப்பை, 15 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வருவது தான். கடந்த, 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 30 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும், நகரம் மற்றும் மாநகர் பகுதிகளில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆர்.-ஏ.பி.டி.ஆர்.பி., திட்டம் இரு பிரிவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. முதல் பிரிவின் படி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மின் உபகரணங்களை அமைத்து, மின் பயன்பாட்டு திறன் மற்றும் இழப்பீடு கணக்கீடு செய்தல் உள்ளிட்ட பணிகள். இரண்டாவதாக, புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைத்தல், துணை மின் நிலையங்கள் ஏற்படுத்துதல், புதிய லைன் வழங்குதல் உள்ளிட்ட, மின் பகிர்மானத்தை வலுப்படுத்தும் பணிகள். தமிழகத்தில், 2009, ஜூலையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு), மதுரை, நெல்லை, ஈரோடு, கோவை, வேலூர், விழுப்புரம், திருச்சி ஆகிய ஒன்பது மண்டலங்களில் உள்ள, 110 நகரங்களில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்ட பணிக்கு, 417 கோடி ரூபாயும், இரண்டாம் கட்ட பணிகளுக்கு, 3,279 கோடி ரூபாயும், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்-ஏ.பி.டி.ஆர்.பி., திட்டத்தின் படி, ஒப்புதல் வழங்கப்பட்டதில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்குள் திட்ட பணிகள் நிறைவடைந்து விட்டால், இரண்டாவது கட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். இதையடுத்து, 110 நகரங்களிலும், புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைத்தல், மின் வழித்தடங்களில் உள்ள சிறிய கம்பிகள் மாற்றப்பட்டு பெரிய கம்பிகள் இணைத்தல், பழைய மற்றும் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டு, புதிய கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள், முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "திட்ட பணிகளை துரித கதியில் முடிக்க, வாரம் தோறும் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. அதில், பணியின் செயல்பாடுகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படுகிறது' என்றார்.
No comments:
Post a Comment