புதிய ஓய்வூதியத் திட்டம் - 40 விழுக்காட்டை அரசு அனுமதித்துள்ள நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டிருப்பதுதான் இப்போது பிரச்னையாகப் பேசப்படுகிறது.

மக்களவையில் கடும் அமளிக்கு இடையிலும், மிகக் குறைவான எதிர்ப்புகளுடன், "ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா-2011' நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையிலும் இந்த மசோதா இதே பாணியில் நிறைவேற்றப்படும் என்பதில் ஐயமில்லை. இனி ஓய்வூதிய நிதிகள் தொடர்பான அனைத்துப் பணிகளையும் இந்த ஆணையம் மேற்கொள்ளும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசு ஊழியர் அமைப்புகளும், ரயில்வே தொழிலாளர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்திய ஓய்வூதிய நிதி முழுவதையும் தனியாரிடம் கொடுப்பதன் மூலம், நட்டமே ஏற்படும். அதனால் ஊழியர்கள், தொழிலாளர்களின் ஓய்வூதியம் தடைபடும் என்பதுதான் அவர்கள் வாதம். இருப்பினும், அவர்களுக்கான ஓய்வூதியத்தின் அளவு குறையும் என்பதுதான் அவர்கள் வெளிப்படையாக சொல்லாத கருத்து.

மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் என்பது இந்தியாவில் பயனாளித் திட்டமாக இருக்கின்றது. ஆதலால், ஒவ்வொரு முறை அகவிலைப் படி உயர்த்தப்படும்போதும், ஓய்வூதியதாரர்களுக்கும் அதன் பயன் போய்ச்சேரும். ஓய்வூதியத் தொகை உயர்ந்துகொண்டே போகும். 2009-10 ஆம் ஆண்டில் மத்திய அரசின் ஓய்வூதியத் தொகை மட்டுமே சுமார் 29,000 கோடி! அனைத்து மாநிலங்களிலும் இதேபோன்று } இதைவிட சில ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக } ஓய்வூதியத்துக்கு ஒதுக்கப்படுகிறது. இது அரசின் மொத்த வருவாயில் கணிசமான பகுதியாக இருக்கிறது என்பதால்தான், புதிய ஓய்வூதியத் திட்டத்தை பங்களிப்புத் திட்டமாக அரசு மாற்றியது.

அதாவது, அரசு சாரா தொழிற்கூடங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தில் பி.எஃப் தொகை பிடித்தம் செய்யப்படும் அதே அளவுக்கு நிறுவனமும் ஒரு தொகை தருகிறது. 58 வயதின் முடிவில் ஒரு தொழிலாளியின் கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளதோ, அவரது பணிக்காலம் எவ்வளவோ, அதைக் கொண்டு ஓய்வூதியம் கணக்கிடப்படும். இந்த ஓய்வூதியம், அரசு ஊழியர் ஓய்வூதியத்தைப் போல, ஒவ்வொரு அகவிலைப்படி உயர்விலும் உயராது. இந்த பங்களிப்புத் திட்டத்தால் அரசுக்கு கூடுதல் செலவுகள் கிடையாது.

அரசு வருவாயின் பெரும்பகுதி அரசு ஊழியரின் சம்பளத்துக்கும் ஓய்வூதியத்துக்குமே சென்றால், காலப்போக்கில் ஓய்வூதிய செலவு உயர்ந்துகொண்டே போய், ஓய்வூதியம் வழங்கவே முடியாத நிலை உருவாகும் நிலைமை ஏற்படக்கூடும். அதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வந்திருப்பது அரசின் தவிர்க்க முடியாத காலக்கட்டாயம் என்கிற வாதத்திலும் உண்மை இருக்கவே செய்கிறது.

ஆனால், இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, 60 ஆண்டுகள் நிரம்பியவர், தனது மொத்த ஓய்வூதியத் தொகையில் 60 விழுக்காட்டை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ளவும், 40 விழுக்காட்டை அரசு அனுமதித்துள்ள நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டிருப்பதுதான் இப்போது பிரச்னையாகப் பேசப்படுகிறது.

முதலீடு செய்யப்படும் இந்த 40 விழுக்காடு தொகையிலிருந்து கிடைப்பதுதான் ஒருவருடைய ஓய்வூதியமாக இருக்கும். ஆனால் ஓய்வூதிய நிதி மூலம் நாடு முழுவதும் திரளும் முழுத்தொகையையும் "ஓய்வூதிய நிதி மேலாளர்கள்' (தற்போது ஆறு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன) வசம் ஒப்படைத்து, அவர்கள் அந்தப் பணத்தை பங்குச் சந்தை, பரஸ்பர நிதி, அரசு நிதிப்பத்திரங்கள் என பலவற்றிலும் முதலீடு செய்வதன் மூலம், அதிக லாபமும் அதிக ஓய்வூதியமும் கிடைக்கும் என்று அரசு சொல்கிறது. இந்த நிறுவனங்கள் அசலையே தொலைத்துவிட்டால் என்ன ஆகும் என்பதுதான் பரவலான அச்சம்.

அதற்கான வாய்ப்பே கிடையாது என்கிறது அரசு. ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனைத்து முதலீட்டு திட்டங்களையும் கண்காணிக்கும்; நிலைமை மாறினால் குறுக்கிட்டுத் தடுத்து நிறுத்தும்; தவறு செய்திருந்தால் அந்நிறுவன சொத்துகளை ஜப்தி செய்து இழந்த தொகையை ஈடு செய்யும்; அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும்; தொழில் உரிமத்தை ரத்து செய்யும்; திடீர் ஆய்வுகள் நடத்த உரிமை உண்டு; ஓய்வூதியத் தொகை அயல்நாடுகளில் முதலீடு செய்யப்படாதபடி கண்காணிக்கும்... இப்படியாக நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும்கூட அச்சம் அகல மறுக்கிறது.

40 விழுக்காடு தொகையை எந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்கின்ற விருப்புரிமை ஓய்வுதியதாரருக்கு அளிக்கப்படுகிறது. பங்குச்சந்தையா, அரசுப் பத்திரமா, பரஸ்பர நிதியா, கடன்பத்திரமா என்பதை ஒய்வூதியதாரர் தேர்வு செய்துகொள்ளலாம். இதுபற்றி அதிக ஞானம் இல்லாததால் நிறுவனத்தின் தன்னிச்சையான முடிவுக்கே (ஆட்டோ சாய்ஸ்) விட்டுவிடுகிறேன் என்று ஓய்வூதியர் கூறினால், அந்த நிறுவனம் தான் நினைத்தபடி தனது திட்டங்களில் அத்தொகையை முதலீடு செய்யும்.

ஓய்வூதிய நிதி மேலாளர்கள் (பென்ஷன் ஃபன்ட் மேனேஜர்ஸ்) கொண்டுவரும் வசீகரத் திட்டங்களுக்கு இந்த ஆணையம் தடை போடுமா? அதிக லாபம், அதிக பணம் என்ற கவர்ச்சியில் ஓய்வூதியதாரர் விழாமல் இருப்பாரா?

ஓய்வூதியத்துக்காக இனி மத்திய, மாநில அரசுகள் பெருந்தொகை செலவிட வேண்டிய தேவை இருக்காது. ஓய்வூதியத்துக்கு ஆணையம்தான் பொறுப்பு.

"சம்பாதிக்கும்போதே சேமிப்பு' என்கிறார் நிதியமைச்சர். இத்திட்டம் சந்தாதாருக்கு அதிக பலன் தரும் என்கிறார். இந்த புதிய திட்டம் "உங்கள் ஓய்வூதியம் உங்கள் மதிநுட்பம்' என்றாகுமா, அல்லது "உங்கள் ஓய்வூதியம் உங்கள் தலையெழுத்து' என்று முடியுமா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால், மசோதா நாடாளுமன்ற ஒப்புதலுடன் விரைவில் சட்டமாகப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...