வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme) பற்றிய சில தகவல்களை, எனது மனக்குமுறல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த ஒரு திட்டம் தான் ‘தனியார் தொழிலில்’ உள்ள தொழிலாளர்களுக்கு கொஞ்சம் பயனளிக்கும் திட்டம். அதாவது = Something is better than Nothing. அவ்வளவு தான் வேறொன்றுமில்லை.
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் சம்பளத்தில் ரூ.6500க்குத் தான் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படும். தொழிலாளர் 12% செலுத்த வேண்டும், நிர்வாகம் 12% செலுத்தும். இந்த ரூ.6500க்குத் தான் உங்களுக்கு ஓய்வூதியம் கணக்கிடப்படும். தொடர்ச்சியாக 10 வருட பணிக்காலம் (Service Period) இருக்க வேண்டும். உங்களது50ஆவது வயதில் ஓய்வூதியம் மனுச் செய்து பெறலாம். அது Short Service Pension எனப்படும். 58வது வயதில் மனுச் செய்து பெறலாம். அது அவர்கள் கணக்கீடு படி கிடைக்கும்.
இது எங்கள் தீப்பெட்டித் தொழில் போல் உள்ளவர்களுக்கு, உழைப்பும் குறைவாக இருக்கும், ஊதியமும் குறைவாக இருக்கும். இவர்கள் கணக்குப் பார்த்து ஏதோ பிச்சை போடுவது போல் போட்டு தருவார்கள்.
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக நிர்ணயம் செய்யப் போவதாக இரண்டு வருடங்களாக செய்தி வந்து கொண்டேயிருக்கிறது. அந்த கூட்டத்தில் இந்த பிரச்னை எடுக்கப் படவில்லை; பேச்சு வார்த்தை முறிந்து விட்டது போல, ஏதாவது ஒரு செய்தி; இதெல்லாம் கண் துடைப்பு.
நான் கேட்கிறேன், அரசு கவிழ்வது போல் இருக்கும் நிலைமை, பாராளுமன்றத்தில் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள், சட்ட சபையில் வெளி நடப்பு செய்வார்கள் – எதற்காக? மக்கள் பிரச்னைக்காக. ஆனால் இவர்களுக்கு – சம்பளம் கூட்ட வேண்டும், ஓய்வூதியம் உயர்த்த வேண்டும், ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், மற்ற அமைச்சர்களுக்கு ஏதாவது விசேஷ சலுகைகள் வழங்க வேண்டும் – என்றால் இவர்கள் ஒற்றுமையாகி 5 நிமிடங்களில் சட்டத்தை நிறைவேற்றி அவர்களுக்கு வேண்டியதை பெறுகிறார்கள்.
இங்கு 100, 200 ஓய்வூதியம் வாங்கும் தொழிலாளர்கள் நிறைய செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு செய்தி படித்தேன், முதியவர்களில் 500 ரூபாய்க்கு குறையாமல் (மிகவும் குறைந்த பட்சம்) மருந்து மாத்திரை செலவு இருக்கிறதென.
எனவே, அரசியல் வாதிகளே, அதிகாரிகளே, குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 என பேசிக் கொண்டிருக்கிறீர்களே, அதையாவது தொழிலாளர்கள் சாகுமுன் கொடுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.நன்றி.
No comments:
Post a Comment