திருப்பூர் போனஸ் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா ( dinamalar )


திருப்பூர் : தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி, தீபாவளி போனஸ் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, தர்ணா செய்தனர்.திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் பணியாற்றும், தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படாததால், அவர்கள், கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, தர்ணா செய்தனர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.மனு விவரம்: பல ஆண்டுகளாக, குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு, மின்வாரியத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். உயரதிகாரிகள் கூறும் பிற பணிகளையும், மழை, புயல் போன்ற சமயங்களில் நிவாரண பணிகளையும் செய்கிறோம். சில மாதங்களுக்கு முன் நடந்த, 200 மின்கம்பங்களை மாற்றும் பணிகளிலும் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம்.
எங்களுடன் இணைந்த சில ஒப்பந்த தொழிலாளர்கள், பணி நிரந்தரமாக்கப்பட்டு, முகவர் வரை பதவி உயர்வு பெற்றுள்ளனர். தொழிலாளர் ஆய்வாளரிடம் மனு கொடுக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், ஆறு லட்சம் மின் இணைப்பு, 8,500 மின் மாற்றி, 5,000 கே.எம்., உயரழுத்த மின்பாதை, 20 ஆயிரம் கே.எம்., தாழ்வழுத்த மின்பாதைகள் உள்ளன. அவற்றை 65 கம்பியாளர்கள், 52 உதவியாளர்களை கொண்டு பராமரிப்பதாக, உண்மைக்கு புறம்பான தகவல்களை உயரதிகாரிகள் அரசுக்கு தெரிவித்துள்ளனர்.உயரதிகாரிகளிடம் தினக்கூலி பெற்று, பணியாற்றும் எங்களை கணக்கில் காட்டாமல் விட்டுள்ளனர். தற்காலிக தொழிலாளர்கள் மின் விபத்தில் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்துக்கு, இதுவரை எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை.

தமிழக முதல்வர், அனைத்து தொழிலாளர்களுக்கும் போனஸ் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியமும், அதன் பணியாளர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. ஐந்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மட்டும் 1,500 ரூபாய் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களது பெயர் இடம் பெறவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, எங்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click