தீபாவளியை முன்னிட்டு, மின் வாரிய ஊழியர்களுக்கு, 'போனஸ்' வழங்குவது சம்பந்தமாக, மின் வாரியம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் வரும், 5ம் தேதி, பேச்சு வார்த்தை நடக்க உள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், பொறியாளர், களப்பிரிவு அலுவலர் என, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், அதிகாரிகளை தவிர, மற்ற ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த, 1996 முதல், 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம் கருணை தொகை என, 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, போனஸ் வழங்குவது சம்மந்தமாக, மின் வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஞானதேசிகனுடன், தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச., தமிழ்நாடு மின் தொழிலாளர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., மத்திய அமைப்பு உள்ளிட்ட, 15 அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், வரும், 5ம் தேதி, காலை, 11:00 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதில், போனஸ் தொகை குறித்த விவரங்கள் விவாதிக்கப்படும் என, தெரிகிறது. பின், தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும். வழக்கம் போல, இந்த ஆண்டும், 8.33 சதவீத போனஸ் மற்றும் 11.67 சதவீத கருணை தொகை என, 20 சதவீத போனஸ் வழங்கப்படுமானால், ஒரு ஊழியர், 8,400 ரூபாயை போனஸ் தொகையாக பெறுவர். இதன் மூலம், 70 ஆயிரக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்பெறுவர். இதுகுறித்து, தமிழ்நாடு மின் கழக தொ.மு.ச., பொதுச் செயலர் சிங்கார ரத்தின சபாபதி கூறுகையில், "கடந்த ஓராண்டுக்கும் மேலாக, மஸ்தூர் பயிற்சியாளராக பணியாற்றி வரும், 4,500க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும்," என்றார்.
No comments:
Post a Comment