மின்சார வாரியத்துக்கு நடப்பாண்டில் ரூ.12 ஆயிரத்து 197 கோடி நிதியுதவி' ( dinamani )

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நடப்பாண்டில் ரூ.12 ஆயிரத்து 197 கோடி, நிதியுதவியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
மின்சாரத் துறை திவாலாகும் நிலையில் இருந்ததாகவும், இப்போது பழைய நிலைமைக்கு வந்து இருப்பதாகவும் அவர் பேசினார்.

தமிழகத்தில் மின்சார நிலைமை குறித்து சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா பேசியது:
கடந்த 2011- ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிந்த காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொத்த இழப்பு சுமார் ரூ.40 ஆயிரத்து 375 கோடியாகும். இந்த இழப்பை ஈடு செய்து தமிழ்நாடு மின்வாரியத்தை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வரும் வகையில் நிதி சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு கடந்த 2011-12-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.7 ஆயிரத்து 913 கோடியும், அதற்கடுத்த நிதியாண்டில் ரூ.11 ஆயிரத்து 242 கோடியும் நிதியுதவியாக வழங்கியது. நடப்பு நிதியாண்டில் இதுவரை இருந்திராத அளவாக ரூ.12 ஆயிரத்து 197 கோடி நிதியுதவியாக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மானியத் தொகை ரூ.4 ஆயிரத்து 749 கோடியை அரசு முன்னதாகவே வழங்கியுள்ளது.
பழைய நிலைமைக்கு வந்துள்ளோம்: திமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரத் துறையையே பாழ்படுத்தி, சீர்குலைத்து அது திவாலாகும் அளவுக்கு ரூ.45 ஆயிரம் கோடிக்கும் மேலாக கடனையும் வைத்து விட்டுச் சென்றார்கள்.
யாரும் கடன் தராத நிலையில், அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இன்றைக்கு படிப்படியாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட அந்தக் கடன் முழுவதையும் அடைக்கும் அளவுக்கு தமிழக அரசே பொறுப்பேற்றுக் கொண்டு அந்தப் பணத்தை மின்சார வாரியத்துக்கு வழங்கி, வாரியத்தை பழைய நிலைமைக்குக் கொண்டு வந்து இருக்கிறோம் என்றார் முதல்வர் ஜெயலலிதா.
http://dinamani.com/tamilnadu/2013/10/26/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/article1855969.ece

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click