தற்காலிக மின் இணைப்பு பெற "டிபாசிட்' செலுத்த தேவையில்லை: அரசு உத்தரவால், மக்கள் நிம்மதி ( தினமலர் )

கோவை: "புதிய வீடு கட்டுமான பணிக்கான, தற்காலிக மின் இணைப்பு பெற, செக்யூரிட்டி டிபாசிட் தொகை செலுத்த தேவையில்லை' என, மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், புதிய மின் கட்டண முறை, கடந்த ஜூன் 21ல் அமலுக்கு வந்தது. அந்த அறிவிப்பில், "ஏற்கனவே வசிக்கும் வீட்டை 2000 சதுர அடிக்குள் விஸ்தரிப்பு செய்ய, தனி மின் இணைப்பு பெறத்தேவையில்லை. கட்டட அனுமதி நகலை ஒப்படைத்து, மின்வாரியத்தில் அனுமதி பெற்று, வீட்டு மின் இணைப்பையே பயன்படுத்தலாம். இரண்டாயிரம் சதுர அடிக்கு மேல் குடியிருப்பை விஸ்தரிப்பு செய்யவும், புதிய வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டவும், தற்காலிக மின் இணைப்பு (டேரிப் -6) பெற வேண்டும். இதற்கான மின் கட்டணம், மாதம் ஒரு கிலோ வாட் உபயோகத்துக்கு குறைந்தபட்சம் 300 ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கு மேல், கூடுதலாக வரும் யூனிட் ஒன்றுக்கு 10.50 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும்' என, அறிவிக்கப்பட்டது. மேலும், "புதிதாக வீடு கட்டுவோர், தற்காலிக மின் இணைப்பு பெற, மின் கம்பம், வயர் போன்றவற்றுக்கு கட்டணமும், ஆள்கள் சம்பளமும் செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கான மின் பயன்பாட்டு கட்டணத்தை, "டெபாசிட்டாக' செலுத்த வேண்டும். மின் பயன்பாடு அளவு ஒரு கிலோ வாட் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதற்கேற்ப "டெபாசிட்' தொகை செலுத்த வேண்டும்' என்ற அறிவிப்பும் வெளியானது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, புதிதாக வீடுகட்டுவோருக்கு மின் இணைப்பு கட்டணத்தில் தளர்வு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிக மின் இணைப்பு பெற்று, கட்டடம் கட்டி முடித்ததும், நிரந்தர மின் இணைப்பாக மாற்றிக்கொள்வதாக உறுதியளித்து விண்ணப்பம் கொடுத்தால், "டெபாசிட்' செலுத்த தேவையில்லை. மின்கம்பம், மின் வயருக்கான செலவை மின்வாரியம் ஏற்றுக்கொள்ளும்' என, அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மின்பகிர்மானக் கழக, கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேல் கூறியதாவது: குடியிருப்பில் 2000 சதுர அடிக்குள் வீட்டை விரிவுபடுத்துவோருக்கு கட்டண சலுகை கிடைத்துள்ளது. "புதிதாக வீடு கட்டவும், அபார்ட்மென்ட் கட்டவும் தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டும். இதற்கு, முன்கூட்டியே "செக்யூரிட்டி டெபாசிட்' செலுத்த வேண்டும்' என, மின் கட்டண சீராய்வில் அறிவிக்கப்பட்டது. மின் கட்டணம் மறுபரிசீலனை செய்யப்பட்டு, தற்காலிக மின் இணைப்பு பெறும் வழிமுறைகளிலும், "டெபாசிட்' செலுத்துவதிலும் தளர்வு செய்யப்பட்டுள்ளது. வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, இண்டஸ்ட்ரீஸ் கட்டுமானம் முடிந்ததும், நிரந்தர இணைப்பாக மாற்றம் செய்யப்படுகிறது. அதனால், தற்காலிக மின் இணைப்பு வழங்கும் போது, மின்வாரியம் மூலமே அனைத்து பணிகளும் செய்யப்படும்; "டெபாசிட்' செலுத்த தேவையில்லை. மின்பயன்பாட்டு கட்டணம் மட்டும் (புதிய மின்கட்டண முறையில்) செலுத்தினால் போதும். சர்க்கஸ், கண்காட்சி போன்றவற்றுக்கு தற்காலிக மின் இணைப்பு கொடுக்கும் போது, கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட "செக்யூரிட்டி டெபாசிட்' கட்டண முறை கடைபிடிக்கப்படும். தனி நபர் குடியிருப்புக்கு மட்டும் தளர்வு வழங்க வேண்டும் என, கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அபார்ட்மெண்ட் மின் இணைப்புக்கும் இதே தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் மீண்டும் மாற்றியமைக்கப்படுமா அல்லது அடுத்த முறை சீராய்வு செய்யும் போது, இந்த பிரச்னை தீர்க்கப்படுமா என்பது தெரியவில்லை. இவ்வாறு, தலைமை பொறியாளர் தங்கவேல் தெரிவித்தார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click