இணையதளம் மூலம் மின் கட்டணம் வசூலில் விறுவிறுப்பு

தமிழகத்தில், இணையதளம் மூலம், மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில், சென்ற மார்ச் மாத நிலவரப்படி, 2.44 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம், மின் கட்டணம் குறித்த கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும். பெரும்பாலானோர், மின் கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்தாமல், கடைசி நாளன்று தான் செலுத்துகின்றனர். இதனால், மின் கட்டணம் வசூலிக்கும் மின் அலுவலகங்களில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதால், பணம் செலுத்துவதில் அதிக இடர்பாடு நிலவி வந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இணையதளம் மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதியை, 2008, செப்டம்பரில் துவக்கியது. இதன்படி, மின் வாரியத்தின் இணையதளத்தில், நுகர்வோர் தங்களின் விவரங்களை பதிவு செய்து, "டெபிட்' அல்லது "கிரெடிட்' கார்டுகளை கொண்டு, வலைதல வங்கி மூலம், மின் கட்டணத்தை எந்த நேரத்திலும் செலுத்தலாம்
. துவக்கத்தில், இந்த சேவை குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்ததால், இதை பலர் பயன்படுத்தவில்லை. தற்போது, இணையதள மின் கட்டண சேவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும், 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் நுகர்வோர், இந்த சேவையைப் பயன்படுத்தி, மின் கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில், இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துவதில், திருச்சி மாவட்டம், 40 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, திருநெல்வேலி, சென்னை தெற்கு, மதுரை ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தின் மொத்த மின் நுகர்வோரில், 13 சதவீதம் அதாவது, 27 லட்சம் பேர், இணையதளம் மூலம் மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். தற்போது, ஆக்சிஸ் வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட, 16 வங்கிகளின், வலைதல வங்கி முறையில், கட்டணம் ஏதுமின்றி, மின் கட்டணத்தை செலுத்தலாம். கூடுதல் வங்கிகளில் இந்த சேவையை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments: