தொழில் நிறுவனங்களுக்கான மின் வெட்டு ரத்து: தொழில் துறையினர் வரவேற்பு

தொழில் நிறுவனங்களுக்கான மின் வெட்டு, நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. தமிழக அரசின், இந்த முடிவை, பல்வேறு தொழில் துறையினர் வரவேற்று உள்ளனர்.

தமிழகத்தில், விவசாயம், தொழிற்சாலை, குடியிருப்புகளுக்கு என, மொத்தம், தினசரி, 12 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், மின் உற்பத்தி, சராசரியாக, 8,000 மெகா வாட் என்ற அளவில் தான் உள்ளது.பற்றாக்குறை மின்சாரம், வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல், மின் வெட்டு, மின் தடை போன்றவற்றின் மூலம் ஈடுசெய்யப்படுகிறது. மின் தேவை அதிகரித்து உள்ளதால், 2008ல் இருந்து மின் வெட்டு நிலவுகிறது.தற்போது, தென் மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால்
, அணைகள் நிரம்பி உள்ளன. இதனால், தமிழகத்தில் நீர் மின் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களில், பலத்த மழை பெய்து வருவதால், மின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து உள்ளது.இதையடுத்து, கடந்த, ஐந்து ஆண்டுகளாக நிலவி வந்த, தொழில் நிறுவனங்களுக்கான, 40 சதவீத மின்வெட்டு நீக்கப்படுவதாகவும், இது, செப்., 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தமிழக அரசு, நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.மேலும், மாலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரையிலான மின் பயன்பாடு அதிகம் உள்ள நேரங்களில், 90 சதவீத மின் வெட்டு, 40 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. அரசின், இந்த முடிவால், உற்பத்தி செலவு குறையும் என, பல்வேறு தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

ரபீக் அகமது, தலைவர், "பிக்கி' அமைப்பு:மின் வெட்டு பிரச்னையால், உற்பத்தியின் போது, மின்சாரத்திற்கான செலவு அதிகமாக இருந்தது. மின் வெட்டு நீக்கப்படுவதன் மூலம், ஒட்டுமொத்த உற்பத்தி செலவில், மின்சாரத்திற்கான செலவு, 30 சதவீதம் வரை குறையக் கூடும்.

சண்முக வேலாயுதன், முன்னாள் தலைவர், தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கம்:மின்சார வாரியத்தின், ஒரு யூனிட் மின்சாரம் பயன்படுத்த, 5.50 ரூபாய் செலவானது. அதேசமயம், ஜெனரேட்டரை பயன்படுத்தும் போது, ஒரு யூனிட் மின்சாரத்திற்காக, 13 முதல், 15 ரூபாய் செலவானது. இனி, குறைந்த செலவில் அதிக பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

சரஸ்வதி, பொதுச் செயலர், சென்னை தொழில் மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு:மின் வெட்டு நீக்கப்பட்டது வரவேற்கக் கூடியது. இதன் மூலம், உற்பத்தி செலவு குறையும். மின் வெட்டு நீக்கப்பட்டது தற்காலிமாக அல்லாமல், தொடர்ந்து இருக்க அரசு முயற்சிக்க வேண்டும்.

- நமது நிருபர் -
http://www.dinamalar.com/news_detail.asp?id=781242

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click