குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்க மத்திய அரசின் பங்களிப்பு உயர வேண்டும் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கருத்து

குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்க வேண்டுமானால், இ.பி.எஸ்–95 ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு அடிப்படை ஊதியத்தில் 1.79 சதவீதமாக உயர வேண்டும் என வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ) தெரிவித்துள்ளது. தற்போது மத்திய அரசின் பங்களிப்பு 1.16 சதவீதமாக உள்ளது.

0.63 சதவீத கூடுதல் தொகை

தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995–ன்படி அடிப்படை சம்பளத்தில் 0.63 சதவீத கூடுதல் தொகையை அரசு செலுத்தினால் அனைத்து தரப்பினரும் மாத ஊதியம் ரூ.1,000 பெற முடியும் என இ.பி.எஃப்.ஓ. கருதுகிறது. இன்றைய நிலையில் நிறுவனர்களோ, தொழிலாளர்களோ இந்த கூடுதல் தொகையை செலுத்த தயாராக இல்லை. அதே சமயம் மாதந்தோறும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

எனவே 0.63 சதவீத தொகையை அரசுதான் செலுத்த வேண்டும் என இ.பி.எஃப்.ஓ. அமைப்பு விரும்புகிறது. மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் இந்த விஷயத்தை மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வர உள்ளது. தற்போது 7 லட்சம் பேர் மாத ஓய்வூதியமாக ரூ.1,000 பெறுகின்றனர்.

2010 மார்ச் 31 நிலவரப்படி 35 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களில் 14 லட்சம் பேர் ரூ.500–க்கும் குறைவாகத்தான் ஓய்வூதியம் பெறுகின்றனர். சிலர் 12 ரூபாய், 38 ரூபாய் மாத ஓய்வூதியமும் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனங்கள் தற்போது ஒரு பணியாளரின் அடிப்படை சம்பளத்தில் 8.33 சதவீத தொகையை அவருடைய இ.பி.எஃப்.ஓ. கணக்கில் செலுத்துகின்றன. மத்திய அரசு 1.16 சதவீதத்தை செலுத்துகிறது. இதனை 1.79 சதவீதமாக்கும் பட்சத்தில் இ.பி.எஃப்.ஓ. அமைப்பிற்கு கூடுதலாக ரூ.750 கோடி முதல் ரூ.800 கோடி வரை கிடைக்கும். இத்தொகை 2018–19–ஆம் நிதி ஆண்டில் ரூ.1,400 கோடியாக உயரும். கடந்த 2012–13–ஆம் நிதி ஆண்டில் 1995 ஓய்வூதிய திட்டத்தில், சில நிலுவை தொகைகள் உள்பட மத்திய அரசு ரூ.1,900 கோடி செலுத்தியதாக தெரிகிறது.

இந்தியாவில் குறைவு

தொழிலாளர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியாவில் இ.பி.எஃப். சந்தாதாரர்கள் விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இது போன்ற தொழிலாளர் பாதுகாப்பு திட்டங்களில் 100 சதவீத உறுப்பினர்கள் உள்ளனர்.

No comments: