மின்சார விநியோகம், கட்டணம் ஆகியவற்றில் பிரச்னை ஏற்பட்டால் நுகர்வோர்கள் மின்நுகர்வோர் குறைதீர் மன்றத்தையே அணுக வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து ஆணையத்தின் செயலாளர் சி.குணசேகரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தவறான மின் கட்டண கணக்கெடுப்பு, புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் காலதாமதம், குறைபாடான மின் மீட்டர்கள் போன்ற பல்வேறு குறைபாடுகளைப் பற்றி பொது மக்கள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு கடிதங்களை அனுப்புகிறார்கள்.
இந்தப் புகார்கள் குறித்து மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நடவடிக்கைகளை எடுக்க முடியாது. எனவே, அத்தகைய மனுக்களை வட்டார மின்சார அலுவலகத்தில் உள்ள மின்நுகர்வோர் குறைதீர் மன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு வட்டத்திலும் மேற்பார்வைப் பொறியாளரைத் தலைவராகக் கொண்ட மின்நுகர்வோர் குறைதீர்மன்றம் செயல்பட்டு வருகிறது.
மின்சார விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் குறைபாடுகள் இருந்தால் அது குறித்து மின் நுகர்வோருக்கான குறைதீர்மன்றத்தை அணுகலாம். மன்றத்தின் தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால், சென்னையில் உள்ள மின்குறை தீர்ப்பாளருக்கு மேல்முறையீடு செய்யலாம் என்று சி.குணசேகரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment