கடலூரில் ரூ.35 கோடி செலவில் 694 மின் மாற்றிகள்: மின் இழப்பைத் தவிர்க்க நடவடிக்கை


கடலூர் : கடலூர் நகரப் பகுதியில் மின் வினியோக முறையில் ஏற்பட்டு வரும் மின் இழப்பு மற்றும் திருட்டைத் தடுக்க 35 கோடி ரூபாய் செலவில் ஏ.எம்.ஆர்., மீட்டர் மற்றும் 694 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட உள்ளது.
தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி இல்லாத காரணத்தினால் கடந்த மூன்றாண்டுகளாக தமிழகமே கடும் மின் வெட்டில் தவித்து வருகிறது.
 உற்பத்தி அதிகரிக்காத நிலையில், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வினியோகம் செய்வதில் 25 சதவீதம் வரை இழப்பு ஏற்படுகிறதுநிலைமையை சமாளிக்க மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள தமிழக அரசு, மின் வினியோக முறையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, அதில் ஏற்படும் மின் இழப்பைத் தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.குறிப்பாக தாழ்வழுத்தப் பாதையில் அமைக்கப்படும் மின் மாற்றிகளில், கூடுதல் இணைப்பு கொடுப்பதால், மின் இழப்பு அதிகமாகிறது. இதனைத் தவிர்க்க, மின் மாற்றிகளின் சுமை மற்றும் மின் பாதையின் தூரத்தை குறைக்கும் வகையில் மின் மாற்றிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப்படுகிறது. மேலும், மின்பாதை கம்பிகளின் தரத்தை உயர்த்தி, மின் இழப்பை 10 முதல் 15 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, 350 மின் மாற்றிகள் மூலம் 55 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வினியோகித்து வரும் கடலூர் நகராட்சி பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த நாகார்ஜூனா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனி (என்.சி.சி.,) நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்படி, கடலூர் நகரப் பகுதியில் தற்போதுள்ள 350 பழைய மின்மாற்றிகளை அகற்றிவிட்டு கூடுதல் திறன் கொண்ட 694 மின்மாற்றிகள் அமைத்து, பழைய மின் பாதைகளை மாற்றி, மின் இழப்பைத் தவிர்க்கும் வகையில் அதிக திறன் கொண்ட கம்பிகளை மாற்றவும், மக்கள் அதிகம் கூடும் இடம், போக்குவரத்து நிறைந்த முக்கிய சந்திப்பு பகுதிகளில் தாழ்வழுத்த மற்றும் உயர் அழுத்த மின் பாதைகளில் கம்பிகளுக்கு பதிலாக கேபிளாக மாற்றப்படும்.மேலும், மின் பாதைகளில் நடைபெறும் மின் திருட்டைத் தடுத்திட, ஒவ்வொரு மின்மாற்றிகளில் இருந்து செல்லும் மின்சாரத்தின் அளவும், மின் மாற்றியில் பெற்றுள்ள இணைப்புகளுக்குச் செல்லும் மின்சாரத்தின் அளவுகளை, மின்வாரிய அதிகாரிகள், அலுவலகத்திலிருந்து கண்காணிக்கும் வகையில் "ஏ.எம்.ஆர்.,' என்கிற "ஆட்டோமெட்டிக் மீட்டர் ரீடர்' மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளது.இந்த பணிகளை மேற்கொள்ள 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வரும் 2014ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும், என்.சி.சி., நிறுவனம் கடலூரில் பூர்வாங்க பணிகளை மேற்கொண்டுள்ளது.அதனையொட்டி, மின்மாற்றிகள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், கேபிள் பொருத்த வேண்டிய இடங்கள், குடிநீர் குழாய்கள் செல்லும் பாதைகள் குறித்து ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click