பரிந்துரைக்கப்பட்ட மின் கட்டண உயர்வு: மக்களின் கருத்துக்காக மார்ச் 2-ல் வெளியீடு


தமிழகத்தில் மின் கட்டண உயர்வு பரிந்துரை, மக்களின் கருத்தைக் கேட்க, வரும் மார்ச் 2-ம் தேதி வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் 2013-2014-ம் ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு பரிந்துரை ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மக்களின் கருத்துகளைக் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 2-ம் தேதி முதல் கட்டண உயர்வு பரிந்துரை தொகுப்பை தனிப்பட்ட முறையில் பெற விரும்புபவர்கள் ரூ. 300 கட்டணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், பலத்த எதிர்ப்பையும் மீறி 2012 ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் மின் கட்டணத்தை 9 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தாததால், மின் பயனீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், பல மாநிலங்கள், மின் கட்டணத்தைச் சரியான நேரத்தில் உயர்த்தாமல், பெரும் கடனுக்கு ஆளாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக, தமிழகம் உட்பட 29 மாநிலங்களில், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
எனவே, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 1-ம் தேதிக்குள், மின் கட்டணங்களை கட்டாயம் மாற்ற வேண்டும். இவ்வாறு மின் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் மாற்றியமைப்பதற்கான பரிந்துரையை மின் வாரியங்கள் சமர்ப்பிக்காவிட்டால், அந்தந்த மாநில ஒழுங்குமுறை ஆணையங்கள் தாங்களே முன்வந்து மின் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய மின்சார தீர்ப்பாயம் அதிரடி உத்தரவை 2011-ல் பிறப்பித்திருந்தது.
இதனடிப்படையில், 2013-14-ஆம் ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு பரிந்துரையை 2012 நவம்பர் 30-ம் தேதியிலேயே ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
81 நாள்கள் தாமதமாக பரிந்துரை சமர்ப்பிப்பு: ஆனால், குறிப்பிட்ட நாளில் மின் வாரியம் கட்டண உயர்வு பரிந்துரையை சமர்பிக்கவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 8-ம் தேதி மற்றும் ஜனவரி 21-ம் தேதிகளில் கடிதம் மூலம் கட்டண உயர்வுக்கான பரிந்துரையை சமர்ப்பிக்குமாறு மின் வாரியத்தை ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியது. தொடர்ந்து பிப்ரவரி 8-ம் தேதியன்றும் கடிதம் மூலம் ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரையை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் சமர்ப்பித்தன.
அதனுடன், 81 நாள்கள் தாமதமாக பரிந்துரையை சமர்ப்பித்ததற்கான காரணத்தையும் நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. மத்திய அரசின் நிதி சீரமைப்பு திட்டம் (எஃப்.ஆர்.பி.) என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்தான் இந்த தாமதம் ஏற்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த காரணத்தை ஏற்றுக்கொண்ட ஒழுங்குமுறை ஆணையம், பரிந்துரை மனுவையும் ஏற்று அதன் மீது கடந்த 21-ம் தேதி விசாரணையும் நடத்தியது. விசாரணையின் முடிவில் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவு:
மின் கட்டணத்தை உயர்த்துவதற்காக சமர்பிக்கப்பட்டுள்ள பரிந்துரையை, பத்திரிகைளில் வெளியிடும் அளவுக்கு சுருக்கி வரும் 25-ம் தேதி மின் வாரியம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த சுருக்கப்பட்ட கட்டண உயர்வு பரிந்துரைக்கு, பிப்ரவரி 28-ம் தேதி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளிக்கும்.
மார்ச் 2-ல் வெளியீடு: ஒப்புதல் அளித்த பின்னர், பொதுமக்களின் கருத்தைக் கேட்கும் வகையில் அந்த பரிந்துரையை மார்ச் 2-ம் தேதி இரண்டு ஆங்கிலப் பத்திரிகைகளிலும், இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளிலும் வெளியிடலாம்.
இந்த கட்டண உயர்வு பரிந்துரை மனுவை தனிப்பட்ட முறையில் பெற விரும்புபவர்கள், மார்ச் 2-ம் தேதி முதல் அனைத்து மின் வாரிய மண்டல தலைமை பொறியாளர்கள் அலுவலகங்கள் மற்றும் மின் விநியோக வட்ட அலுவலகங்களிலும் ரூ. 300 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் காலங்களில் மின் வாரியம் உரிய நேரத்தில் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவில் தெரிவித்துள்ளது.
கட்டணம் எவ்வளவு உயரும்: இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
2012 ஏப்ரலில் மின் கட்டணம் பன்மடங்காக உயர்த்தப்பட்டது. மேலும் இப்போது மின் நிலைமை சற்று மோசமாக உள்ளது. சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் பல மணி நேர மின் வெட்டு அமலில் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இருந்தபோதும், மத்திய மின்சார தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, மின் பயனீட்டுக் கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான பரிந்துரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைக்கு அனுமதி அளித்து, மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், மிக மிகக் குறைந்த அளவிலேயே கட்டண உயர்வு இருக்கும் என்றார்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click