தொழிற்சங்கம் ஸ்டிரைக் எதிரொலி : 8 கோடி மின் கட்டண வசூல் பாதிப்பு

சென்னை: தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்தால், தமிழகத்தில் சுமார் ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் மொத்தம் 1.64 கோடி வீட்டு இணைப்புகள் உள்ளன. மின் பயன்பாட்டு அளவு கணக்கீடு செய்து முடித்தவுடன், அடுத்த 20 நாட்களில் மின்கட்டணத்தை செலுத்த வேண்டும். அப்படி செலுத்த தவறினால், மின் இணைப்பு துண்டிக்கப்படும் அல்லது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு மறு இணைப்பு தரப்படும்.  மின்கட்டண மையங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், இணையதளம் ஆகியவை மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இருப்பினும், மின்கட்டண மையங்களில் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், சிஐடியு, தொமுச உள்பட 11 மத்திய தொழிற்சங்கங்கள் கடந்த 2 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் மின்ஊழியர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால், மின்கட்டண மையங்களில் பணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மின்கட்டண வசூல் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் மூலம் தினமும் ரூ.20 கோடிக்கு வசூலாகும். முதல்நாள் வேலைநிறுத்த போராட்டத்தால் 60 சதவீத மின்கட்டண வசூல் மையங்கள் மூடி இருந்தன. இதனால், ரூ.8 கோடிக்கு மின்கட்டணம் வசூலிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments: