மின் ஏற்ற இறக்க பாதிப்பு: நுகர்வோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 50 வழங்க வேண்டும் TNERC கருத்து கேட்பு

TNERC ஆணையை பர்க்க இங்கே கிளிக் செய்யவும்

மின் ஏற்ற, இறக்க பாதிப்பை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சரிசெய்யாவிட்டால், மின் நுகர்வோருக்கு (பொது மக்களுக்கு) நாள் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் மின் வாரியம் வழங்க வேண்டும் என நடைமுறை திருத்த வரைவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, மின் ஏற்ற இறக்க பாதிப்பை (ஃபுலெக்ட்சுவேஷன்) குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் சரிசெய்யவில்லையெனில், நுகர்வோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் மின் வாரியம் வழங்க வேண்டும். இந்த அறிவிப்பு தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஒழுங்குமுறை ஆணையம் வரவேற்றுள்ளது. இந்த கருத்துகளை மார்ச் 8-ம் தேதிக்குள் -செயலர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 19-ஏ, ருக்மிணிலட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை - 600 008- என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

நடைமுறை திருத்த வரைவு குறித்த விவரம்: வீடுகளுக்கான ஒருமுனை, மும்முனை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான (11000 - 22000 வோல்ட்) மின் விநியோகங்களில் மின் ஏற்றம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 6 சதவீத அளவில் மட்டுமே அதிகரிக்க வேண்டும். மின் இறக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 10 சதவீத அளவில் குறையலாம்.
மின்சார வயர்கள் அல்லது நெட்வொர்க் விரிவுபடுத்தும் பணிகள் எதுவும் நிகழாத நிலையில், மின் ஏற்ற இறக்கம் ஏற்படுமேயானால், பாதிப்பை 48 மணி நேரத்துக்குள் மின் வாரியம் சரிசெய்ய வேண்டும்.
குறைந்த அழுத்த (எல்.டி.) மின் தொடரமைப்பில் மாற்றம் செய்தல் அல்லது மின் மாற்றிகள், கெப்பாசிட்டர்கள் பிரச்னை காரணமாக மின் ஏற்ற இறக்கம் ஏற்படுமேயானால், 60 நாள்களுக்குள் பாதிப்பு சரிசெய்யப்பட வேண்டும்.
உயரழுத்த (ஹெச்.டி.) மின் தொடரமைப்பு மேம்படுத்தும் பணியால் மின் ஏற்ற இறக்கம் ஏற்படுமேயானால், 120 நாள்களுக்குள் பாதிப்பு சரிசெய்யப்பட வேண்டும்.
இந்த நிர்ணயிக்கப்பட்ட நாள்களுக்குள் பாதிப்பு சரிசெய்யப்படவில்லையெனில், நாள் ஒன்றுக்கு ரூ. 50 வீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 1000 வீதம் நுகர்வோருக்கு மின் வாரியம் அளிக்க வேண்டும்.

No comments: