வல்லூர் அனல் மின்நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது யூனிட்டில் செவ்வாய்க்கிழமைமுதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டங்களில் செய்யப்பட்டுவந்த பல மணி நேர மின்வெட்டு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், கோடையில் மீண்டும் மின்வெட்டு பழைய நிலையை எட்டுமோ என்ற அச்சம் மக்களிடையே இருந்து வருகிறது.
மக்களின் இந்த அச்சத்தைப் போக்கும் வகையில், பழுதடைந்த மின் உற்பத்தி யூனிட்டுகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பணிகளையும், புதிய திட்டங்களை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான பணிகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
தமிழக அரசின் உத்தரவின்பேரில், பாதிக்கப்பட்ட மற்றும் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பலனாக பல நாள்களாக பாதிக்கப்பட்டு வந்த மேட்டூர் அனல் மின் நிலைய புதிய யூனிட்டில் பிப்ரவரி 22-ம் தேதி முதல் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதுபோல் பல நாள்களாக பாதிக்கப்பட்டிருந்த குத்தாலம் எரிவாயு மின் உற்பத்தித் திட்டத்திலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
வல்லூர் 2-வது யூனிட்: இதனிடையே வல்லூர் அனல் மின் நிலைய புதிய யூனிட்டான 2-வது யூனிட்டில் மின் உற்பத்தித் திட்டம் செவ்வாய்க்கிழமைகாலைமுதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும், தேசிய அனல் மின் கழகமும் (என்டிபிசி) இணைந்து ரூ. 8 ஆயிரம் கோடி செலவில் 500 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட மூன்று யூனிட்டுகளை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
இதில் முதல் யூனிட்டில் 2012 நவம்பர் 28-ம் தேதி வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்டு தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. (கடந்த சில நாள்களாக உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தபோதும், இப்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது).
அதனைத் தொடர்ந்து 2-வது யூனிட் திட்டப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்த திட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், செவ்வாய்க்கிழமைகாலை 2-வது யூனிட்டில் சோதனை மின் உற்பத்தி முதன்முறையாக தொடங்கப்பட்டது.
முதல் நாளில் அதிகபட்ச உற்பத்தித் திறனான 500 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்து சோதிக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்படும்.
தொடர்ந்து ஓரிரு நாள்கள் பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்தபிறகு, மீண்டும் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் மூன்று மாதங்களுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு பின்னர் வர்த்தக ரீதியிலான (முழு அளவு) உற்பத்தி தொடங்கப்படும்.
வடசென்னை அனல் மின் நிலையத்திலும்... வடசென்னை அனல் மின் நிலையத்தில் பல நாள்களாக உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த 2-வது யூனிட்டும் செவ்வாய்க்கிழமைமுதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதுபோல் முதல் யூனிட்டுக்கான புதிய "ஜெனரேட்டர் ஸ்டேட்டர்' வந்து சேர்ந்துவிட்டநிலையில், அதைப் பொருத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்ச் 31-ம் தேதிக்குள் திட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிடும் என்று பொறியாளர்கள் உறுதியளித்துள்ளனர்.
எனவே 2011-ம் ஆண்டே செயல்படத் தொடங்கியிருக்கவேண்டிய இந்த முதல் யூனிட், வரும் ஏப்ரல் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
No comments:
Post a Comment