உயர்கிறது மின் இணைப்பு டிபாசிட் கட்டணம் : மீட்டருக்கும் வாடகை வசூலிக்க திட்டம்( தினமலர் செய்தி )


மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மின் மீட்டருக்கும் இனி, மாத வாடகை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மொத்தம், 2.30 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், 35 லட்சம் மின் இணைப்புகள், வணிக ரீதியிலானவை. 19 லட்சம் இலவச மின் இணைப்புகள், விவசாயம் மற்றும் குடிசை பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, மின்பற்றாக்குறை காரணமாக, தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டு, சேவையின் அடிப்படையில், குறைந்த விலையில் நுகர்வோருக்கு, மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால், மின்வாரியம், 54 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து, செலவினங்களை குறைத்து, வருவாயை அதிகரிக்க, மின்வாரியம் முடிவு செய்தது.முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.இந்நிலையில், புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்சார கணக்கீடு எடுக்கவும், மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும், வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு முனை மின் இணைப்பு பெற, தற்போதைய கட்டணம், 250 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாகவும்; மும்முனை இணைப்புக்கான கட்டணம், 500 ரூபாயில் இருந்து, 1,600 ரூபாயாகவும்; வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம், 3,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிகிறது.இதே போல், மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வீட்டு மின் மீட்டர்களுக்கு, 10 ரூபாயும், மும்முனை மின் மீட்டர்களுக்கு, 40 ரூபாயும், வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, 50 ரூபாயும் வாடகை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாகவும்; மும்முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 750 ரூபாயாகவும் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மீட்டர்களுக்கான டிபாசிட் கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 700 ரூபாயில் இருந்து, 825 ரூபாயாகவும்; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, 2,000 ரூபாயில் இருந்து, 3,650 ரூபாயாகவும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. மேலும், உயர் மின் அழுத்த மீட்டர்களுக்கான வைப்புத் தொகை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 65 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார கணக்கீடு செய்ய, தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. ஆனால், இனி, ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார கணக்கீடு செய்ய, 10 ரூபாயும், குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, 100 ரூபாயும், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, 250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.மின்சார கணக்கீட்டை குறித்து வைக்கும், வெள்ளை அட்டையின் விலை, 5 ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்சார கட்டணங்களை உயர்த்தியன் மூலம், ஆண்டுதோறும், 9,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மின்வெட்டு பிரச்னையின் காரணமாக, நுகர்வோருக்கு முழுமையான மின்சாரம் வழங்க முடியவில்லை. இதனால், மின்சார கட்டண உயர்வால், ஆண்டுக்கு, 7,500 கோடி ரூபாய் மட்டுமே கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது.மின்சார சேவை கட்டணங்கள், 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. எனவே, தற்போது மின்சார சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். பொதுமக்களை பாதிக்காத வகையில், அவர்களின் கருத்துகளை அறிந்த பின்னரே, புதிய கட்டணங்களை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கண்டவாறு கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 2,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும். கட்டண உயர்வு தொடர்பாக, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின், அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில், மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

No comments: