புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு


நடுவண் அரசு 01.01.2004ல் நாடு முழுவதும் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து படிப்படியாக பெரும்பாலான மாநில அரசுகளும் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தன. இத்திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றாலும் தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் செய்தவண்ணம் உள்ளனர்.

இத்திட்டத்தினால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தவர்கள், ஒய்வு பெற்றவர்களுக்கு எவ்வித பணப்பலன் கொடுக்கப்படாமல் அக்குடும்பங்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளன. எனவே இத்திட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி துறையை சார்ந்த 33 ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 

இவ்வழக்கானது (வழக்கு எண்.W.P.NO.2470/2013) நீதியரசர்.சந்துரு அவர்கள் முன்னிலையில் 31.01.2013 அன்று விசாரணைக்கு வந்தது. நீண்ட விவாதத்திற்கு பின் இவ்வழக்கை ஏற்றுகொள்வது குறித்த தீர்ப்பு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆசிரியர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திரு.முத்துகுமார் கூறுகையில் இத்திட்டத்தினால் பல்வேறு ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். அதேபோல் இத்திட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், இத்திட்டம் நடைமுறைக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்தவித தெளிவான அரசாணைகளும், செலுத்திய சந்தாவை திருப்புவதற்கான வழிக்காட்டுதல்கள் இல்லாதது குறித்தும் நீதியரசர் அவர்களிடம் விளக்கி உள்ளோம் என்று தெரிவித்தார். இதற்கான தீர்ப்பு வரும் வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

No comments: