முறைப்படி திருமணம் புரியாத பெண்ணின் வாரிசுகளுக்கும் அரசு ஊழியரின் பண பலன்களை வழங்கலாம்'


"ஏற்கனவே திருமணமான மத்திய அரசு ஊழியர், மற்றொரு பெண்ணை மணந்து, அதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும், ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை, சமீபத்தில், அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள, உத்தர வில் தெரிவித்துள்ளதாவது:முறைப்படி திருமணம் செய்து கொண்ட, அரசு ஊழி யரின் வாரிசுகளுக்குத் தான், அவருடைய பணப்பலன்கள் கிடைக்க வேண்டும் என்பது வழக்கத்தில் உள்ள நிலை.இதில், மாற்றம் செய்யப்பட வேண்டும் என, தொடர்ந்து, பல தரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் விளைவாக, மத்திய, சட்டம், நீதித்துறை மற்றும் நிதியமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டு, மத்திய, சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய) விதிகள், 1972ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய அரசு ஊழியரின், ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்களை, அவருடைய, முறையான திருமண வாரிசுகளுக்கு வழங்கப்படுவது போல, சட்ட அங்கீகாரம் இல்லாத வகையில், மற்றொரு பெண்ணை, அவர் மணந்திருந்தால், அந்தப் பெண்ணின் குழந்தைகளுக்கும், பணப் பலன்கள் பிரித்து கொடுக்கப்பட வேண்டும்.
இரண்டு வகையான வாரிசுகளுக்கும், எவ்வளவு சதவீதம் பிரித்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை, நிலைமையின் உண்மைத் தன்மையை ஆராய்வதன் மூலமும், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை பொறுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளே முடிவெடுத்துக் கொள்ளலாம்.இந்த உத்தரவு, கடந்த மாதம், 27ம் தேதி முதல் தான், அமலுக்கு வந்துள்ளது. எனவே, முந்தைய வழக்குகளுக்கும், கோரிக்கைகளுக்கும், இந்த உத்தரவு செல்லாது. இந்த வசதியை, முந்தைய காலத்திற்கு பயன்படுத்தி, பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை, ஏற்க முடியாது.இவ்வாறு, அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: