வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது


வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி தொடங்கியது: 340 மெகாவாட் கிடைக்கிறது.
 1/1 

சென்னை, டிச.16 - வல்லூர் அனல் மின்நிலையத்தில் 500 மெகாவாட் மின்சார உற்பத்தி நேற்று முன்தினம் தொடங்கியது. வல்லூர் அனல் மின்நிலையத்தின் முதல்கட்ட பணி நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) தொடங்கியது. 500 மெகாவாட் மின்சாரம் இங்கு வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும். 
இதுபற்றி வல்லூர் அனல் மின்நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது வல்லூர் அனல் மின்நிலையம் 340 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதிகபட்ச (500 மெகாவாட்) மின் உற்பத்தியை தொடங்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்கு நிலக்கரி கிடைப்பது பிரச்சினையாக இருந்தது. அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு விட்டது. எனவே வல்லூர் அனல் மின்நிலையத்தில் அதிகபட்ச உற்பத்தி இலக்கை விரைவில் அடைய முடியும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார். 
தமிழகத்திற்கு மொத்தம் 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 8,000 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. எனவே 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாகவே உள்ளது. வல்லூரில் தற்போது தொடங்கப்பட்டுள்ள முதல்கட்ட மின்சார உற்பத்திக்கு தினசரி 8,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. 
வல்லூரில் திட்டமிடப்பட்டுள்ள 3 கட்ட மின் உற்பத்தி (மொத்தம் 1,500 மெகாவாட்) பணிக்கு ரூ.8,444 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. வல்லூரில் 2-ம் கட்ட மின் உற்பத்தி பணி 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: