திருப்பூரில் தடையில்லாமல் 4 மணி நேரம் மின்சாரம் : பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்தது


திருப்பூர்: தொழில் துறையினருக்காக, தடையில்லாமல் நான்கு மணி நேரம் மின்சாரம் வழங்கும் திட்டம், பரீட்சார்த்த முறையில், நேற்று அமலுக்கு வந்தது. திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள், அதைச் சார்ந்த தொழில்கள்; பல்லடம், அவிநாசி பகுதிகளில், விசைத்தறி; காங்கயத்தில் ஆயில், அரிசி உற்பத்தி, நூற்பாலைகள் என, பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு காரணமாக, தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, தொழிலாளர்களும் வேலை இழப்புக்கு ஆளாகினர்.


இந்நிலையில், துணை மின் நிலையங்களுக்கு கிடைக்கும் மின்சாரத்தை கணக்கிட்டு, பகலில் கிடைக்கும் மின்சாரத்தை, அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்காமல், தொழில் நிறுவனங்கள் உள்ள மின் பாதைகளுக்கு மட்டும், தொடர்ந்து நான்கு மணி நேரம், தடையில்லாமல் வழங்க, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு மின் பாதையிலும், குறைந்தபட்சம், 50 முதல், 70 சதவீதத்துக்கு மேல் தொழில் நிறுவனங்கள் உள்ள பகுதிகளை தேர்வு செய்து, தொடர்ந்து, நான்கு மணி நேரம் மின் வினியோகம் செய்து வருகின்றனர். நேற்று முதல், இத்திட்டம், பரீட்சார்த்த முறையில் அமலுக்கு வந்துள்ளது. காலை, 7:00 முதல், 11:00 மணி வரை; காலை, 11:00 முதல், பிற்பகல், 3:00 மணி வரை; மதியம், 2:00 முதல், மாலை, 6:00 மணி வரை என, மின் வினியோகம் செய்யப்படுகிறது.

மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள் கூறியதாவது: தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில், தடையில்லாமல் நான்கு மணி நேரம் மின் வினியோகம் செய்யும் நடைமுறை, பரிசோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில் துறையினர் மற்றும் நுகர்வோர் கருத்துகள் அறியப்பட்டு, அதன் அடிப்படையில், இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 comment:

semmalai akash said...

ம்ம்ம் சரிதான், தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே,

நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click