மின்வாரியத்தில் குடும்ப ஓய்வூதியம் தொடா்பான வழக்கில் திருமண பதிவு கட்டாயமல்ல: ஐகோர்ட் அதிரடி

மதுரை:'இந்து திருமண பதிவுச் சட்டப்படி திருமண பதிவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது; கட்டாயமல்ல; திருமணத்தை பதிவு செய்யவில்லை என்பதற்காக, உரிமையை மறுக்க முடியாது. மனுதாரருக்கு, குடும்ப ஓய்வூதியம் மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஸ்ரீவில்லிபுத்துார் தவமணி தாக்கல் செய்த மனு:
என் கணவர் ராஜு, மதுரை சமயநல்லுார் மின்வாரியத்தில் வருவாய் கண்காணிப்பாளராக பணிபுரிந்து, 2000ல் ஓய்வு பெற்றார்; 2014ல் இறந்தார். அவரது முதல் மனைவி துர்க்கையம்மாள், ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்தார். அவர், 1997ல் இறந்தார்.எனக்கும், ராஜுவிற்கும், 1977ல் திருமணம் நடந்தது. எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். துர்க்கையம்மாள் மகன் எங்களுடன் வசிக்கிறார்.

நிராகரித்தார் : குடும்ப ஓய்வூதியம் கோரி, மதுரை மின்வாரிய (டான்செட்கோ) கண்காணிப்பு பொறியாளரிடம், 2014ல் விண்ணப்பித்தேன். அவர், உள் தணிக்கை அலுவலருக்கு (ஓய்வூதியம்) அனுப்பினார். அவர் திருமண பதிவுச் சான்று இல்லை எனக்கூறி நிராகரித்தார்.அதை ரத்து செய்து, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தவமணி குறிப்பிட்டிருந்தார்.மனுவை விசாரித்து, நீதிபதி எஸ்.வைத்திய நாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம், 2009ல் அமலானது. அதற்கு முன் இதுபோன்ற நிபந்தனை இல்லை. மனுதாரருக்கு போட்டியாக, வேறு யாரும் குடும்ப ஓய்வூதியம் கோரவில்லை.இந்து திருமண பதிவுச் சட்டப்படி, திருமண பதிவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது; கட்டாயமல்ல. பதிவு செய்யவில்லை என்பதற்காக, திருமணம் செல்லாது எனக்கூற முடியாது.

திருமணத்தை பதிவு செய்யவில்லை, பதிவுச் சான்று சமர்ப்பிக்கவில்லை என்பதற்காக நியாயமான உரிமைகளை மறுக்க முடியாது.பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது எனக் கருதினால், ஒட்டுமொத்த திருமண முறையில் குழப்பம் ஏற்படும். பதிவு செய்யாத திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் சிக்கல் ஏற்படும்.

ஓட்டைகள் :திருமண பதிவுச் சட்டம் கொண்டு வந்த, சட்டசபையின் நோக்கம் பாராட்டும் வகையில் உள்ளது. திருமணத்தை பதிவு செய்வதை தவிர்க்க பல்வேறு ஓட்டைகள் உள்ளன.மனுதாரருக்கு, 1977ல் திருமணம் நடந்துள்ளது. திருமண அழைப்பிதழ் உட்பட, 12 ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். மின்வாரியத்தின் கருத்து ஏற்புடையதல்ல. குடும்ப ஓய்வூதியம் மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.சென்னை உள் தணிக்கை அலுவலர் (ஓய்வூதியம்) ஆவணங்களை பரிசீலித்து, குடும்ப ஓய்வூதியத்தை, இரு மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click