2 வது மனைவிக்கு சட்டப்படி ஓய்வூதியம் உண்டு: உயர்நீதிமன்றம்

முறைப்படி திருமணமாகாவிட்டாலும் 2வது மனைவி சட்டப்படி ஓய்வூதியம் பெற உரிமையுண்டு என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலரான ஸ்டான்லி கடந்த 1973 ஆம் ஆண்டு ஜூன் 6ம் தேதி சுகந்தி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இருவருக்குமான திருமண வாழ்க்கையில் ரூத் எஸ்பியா என்ற மகள் பிறந்தார். அதன் பின் இரண்டு வருடங்களில் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். முதல் திருமணத்திற்கான பந்தம் முறிவடையாத நிலையில், கடந்த 1976 ஆம் ஆண்டு ஜூன் 23-ந் தேதி சுசீலா என்ற பெண்ணை ஸ்டான்லி திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு நக்கீரன் என்ற மகன் பிறந்தார். தற்போது நக்கீரனுக்கு 35 வயதாகிறது. இந்நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு முதல் மனைவி சுகந்தி வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கின் மீதான விசாரணையின் முடிவில் கடந்த 2003 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட நீதிமன்றம் சுகந்தி-ஸ்டான்லி இடையேயான திருமண பந்தத்தை முறித்து வைத்தது. பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு சுகந்தி காலமானார்.அதே சமயம் 2001ஆம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஸ்டான்லி, தனது ஓய்வூதிய தொகையை மாதா மாதம் பெற்று வந்தார். பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டில் தன்னுடைய மரணத்திற்கு பின் 2வது மனைவியான சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஸ்டான்லி பரிந்துரை கடிதம் கொடுத்தார்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு ஸ்டான்லி காலமானார்.இதையடுத்து கடந்த 2014 செப்டம்பர் மாதம் அம்மாவட்ட கண்காணிப்பாளர், ஸ்டான்லியின் ஓய்வூதிய தொகையை சுசீலாவுக்கு வழங்கலாம் என்று முன்மொழிந்து முதன்மை கணக்காளர் நாயகம் (கணக்குகள் மற்றும் உரிமங்கள்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்.ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கடிதத்தை ஏற்க மறுத்த, கணக்காளர் நாயகம் சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என கடந்த பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு பதிலளித்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுசீலா வழக்கு தொடர்ந்தார். இம்மனுவை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:சுசீலாவுக்கும், ஸ்டான்லிக்கும் இடையே நடைபெற்ற திருமணம் சட்டப்படி செல்லாது என்ற போதிலும், கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் ஸ்டான்லியுடன் சுசீலா வாழ்ந்து வந்துள்ளார். ஸ்டான்லியின் மரணம் வரை சுசீலா உடன் இருந்துள்ளார். சுகந்திக்கும் விவாகரத்து வழங்கப்பட்டுவிட்டது. ஸ்டான்லியும் தனக்குப்பின் சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் கணக்காளர் நாயகம் மாவட்ட கண்காணிப்பாளரின் கடிதத்தை ஏற்க மறுத்து, சுசீலாவுக்கு ஓய்வூதியம் வழங்கமுடியாது என்று கூறியுள்ளார்.எனவே கணக்காளர் நாயகத்தின் முடிவை ரத்து செய்து, ஸ்டான்லி இறந்த பின்புள்ள காலத்திற்கான ஒட்டுமொத்த ஓய்வூதிய தொகையையும் 12 வார காலத்திற்குள் சுசீலாவுக்கு வழங்கவேண்டும் என்றும், அதன் பின் சுசீலாவுக்கு வழக்கமாக மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கவேண்டும் இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click