புதுச்சேரி, : இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (ஜேஇஆர்சி) சார்பில் மின்கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம் பிஎம்எஸ்எஸ் வளாகத்தில் நேற்று நடந்தது.
ஜேஇஆர்சி தலைவர் சதுர்வேதி தலைமையில் நடந்த கூட்டத்தில் செயலர் ராஜீவ்அமீத், ஆலோசகர் ஸ்ரீதரன், புதுவை மின்துறை மற்றும் மின்திறல் குழும அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு புதுவை மாநில செயலாளர் விஸ்வநாதன், மா. கம்யூனிஸ்டு செயலா ளர் முருகன், பெற்றோர் மாணவர் சங்க தலைவர் வை.பாலா, ரகுபதி உள் ளிட்ட 50க்கும் மேற்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொண்டனர்.
புதுவை அரசு மின்துறை 2014-15ம் ஆண்டுக்கான நிகர வருவாய் மற்றும் மின் கட்டண நிர்ணயம், மின்தேவை மேலாண்மை திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட வீடுகளுக்கு எல்இடி பல்பு வழங்க விண்ணப்பம், காரைக்கால் புதுவை மின்திறல் குழுமத்தின் 2014-15ம் ஆண்டுக்கான மின்உற்பத்தி கட்டண நிர்ணயம் குறித்து ஆராய்வதற்காக யூனியன் பிரதேசமான புதுவை மின்நுகர்வோரிடம் கருத்து கேட்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் தற்போது பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே மின்கட்டண உயர்வு குறித்த கூட்டத்தை நடத்த கூடாது என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.
தகவலறிந்த தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணிக்கும் குழுவினர் வந்து இதுபோன்ற கூட்டம் எவ்வாறு நடத்தப்படுகிறது என கேட்டனர். அதற்கு ஜேஇஆர்சி குழுவினர், தேர்தலுக்கும் இந்த கூட்டத்திற்கும் சம்பந்தமில்லை, வரும் ஜூன் மாதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்படாது, இலவச அறிவிப்பு வெளியிடவில்லை என கூறியதால் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இத னால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து தொடர்ந்து நடந்த கூட்டத்தில் மின்நுகர்வோர் பேசியதாவது:
மாகே தனியார் நிறுவனத்தில் நிலுவையில் இருந்த பல கோடி மின்பாக்கியை வசூல் செய்ய சென்ற மின் அதிகாரிகளை நிறுவனத்தினர் துரத்தியடித்தனர். தனியார் நிறுவனங்களில் பல கோடி வசூலிக்கப்படாத மின்பாக்கி உள்ளது. ஆனால் வீடுகளில் ரூ.500, 1000 பாக்கி இருந்தால் உடனடியாக சென்று மின் இணைப்பை துண்டிக்கின்றனர். 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் நிலையில் மின்இணைப்பு துண்டிப்பதை தவிர்க்க வேண்டும். மின்திருட்டை தடுக்க மின்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் ரூ.320கோடி மின் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அதனை வசூலிக்க பொதுமக்களாகிய நுகர்வோர் மீது திணிக்கின்றனர். 10சதவீத மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். இந்தியாவிலேயே புதுவையில் தான் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எல்இடி பல்பு வழங்குவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ. 22 கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதால், இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
விவசாய நிலங்கள் அனைத்தும் கட்டிடங்களாக மாறி வரும் நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவற்றை திரும்ப பெற வேண்டும். வீடுகளுக்கு வழங்கப்படும் ஒரு லைட் சர்வீஸ் மூலம் நாள் ஒன்றுக்கு 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். இதுபோன்று புதுவையில் 6000 மின் இணைப்புகளும், காரைக்காலில் 6000 மின் இணைப்புகளும் உள்ளது. இவற்றை ரத்து செய்ய வேண்டும்.
புதுவையின் நகர பகுதியில் இரவு நேரங்களில் போடப்படும் தெரு விளக்குகள் பகலிலும் தொடர்ந்து எரிவதால் மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. மின்கட்டணம் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளதால், அடுத்த சில ஆண்டுகளுக்கு மின்கட்டண உயர்வு தேவையில்லாதது என கூறினர். நுகர்வோரின் கேள்விகளுக்கு ஜேஇஆர்சி மற்றும் மின்துறை அதிகாரிகள் எவ்வித பதிலும் அளிக்காமல் கூட்டத்தை முடித்தனர்.
No comments:
Post a Comment