மின் கசிவு மற்றும் திடீர் மின் தடையைப் போக்கவும் தேர்தல் கூட்டங்களுக்காக அரசியல் கட்சிகள் மின்சாரம் திருடுவதைத் தடுக்கவும் சென்னையில் சுமார் ஆயிரம் இடங்களில் புதிய மின் இணைப்புப் பெட்டிகள் பொருத் தப்படுகின்றன.
சென்னையில் மின் இணைப்பு கள் மற்றும் வழித்தடங்கள் அனைத்தும் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் மூலமே வழங்கப்படுகின்றன. இதற்காக சாலைகள், தெருக்களில் மின் இணைப்புப் பெட்டிகள் அமைத்துள்ளனர். அவற்றின் மூலமே வீடுகள், கடைகள், வர்த்தக நிறு வனங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுறது.
நகரில் உள்ள பெரும்பாலான மின் இணைப்புப் பெட்டிகள், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை ஆகும். அதனால் பல பெட்டிகள் கதவு இல்லாமல், துருப்பிடித்து காணப்படுகின்றன. சேதமடைந்த பெட்டிகளிலுள்ள மின் கேபிள்கள் அடிக்கடி அறுந்து விடுவதால், பல இடங்களில் மின் கசிவுப் பிரச்சினையும், அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி திறந்து கிடக்கும் மின் இணைப்புப் பெட்டி களில் இருந்து சிலர் மின்சாரம் திருடுவதும் எளிதாகிறது. தற் போது தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்கு மின்சாரம் திருட வாய்ப்புள்ளதாக மின் துறை அதிகாரிகளுக்குத் தகவல்கள் வந்தன.

இதையடுத்து, மின் நுகர்வோரின் குறை தீர்ப்பு என்ற அடிப்படையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் ஆய்வு நடத்தி, பழைய மின் இணைப்புப் பெட்டிகளை மாற்ற முடிவு செய்தனர்.
மோசமான மின் இணைப்புப் பெட்டிகளை பராமரிக்கக் கோரி, நேதாஜி போக்குவரத்துத் தொழி லாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.அன்பழகன், கடந்த 2012-ல் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், மின் இணைப்புப் பெட்டிகளை அடிக்கடி பராமரிக்க வேண்டும், பாழடைந்த, திறந்து கிடக்கும் பெட்டிகளை மாற்ற வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
எனவே, பழுதடைந்த மின் இணைப்புப் பெட்டிகளை மாற்றும் நடவடிக்கையில் மின் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள் ளனர். முதல்கட்டமாக சுமார் ஆயிரம் இடங்களில் பழைய பெட்டிகளை மாற்றி, புதிய பெட்டிகள் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை மண்டல மின் துறை செயற்பொறியாளர் கூறும்போது, ‘‘முதல்கட்டமாக முக்கிய சாலைகளிலுள்ள மின் இணைப்புப் பெட்டிகளை புதிதாக மாற்ற உள்ளோம். பின்னர் தெருக்களிலும் சிறிய சந்துக்களிலும் மாற்றுவோம். மின் திருட்டைத் தடுக்க புதிய மின் இணைப்புப் பெட்டிகளில் பூட்டு போடவும் முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

thanks to tamil.thehindu