தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தமிழ்நாடு தொழில்நிறுவனங்கள் ( பணியாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கும் )சட்டம் 1981லிருந்து மின்வாரியத்திற்கு விதிவிலக்களித்திட வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக அரசுக்கு மனு (TNEBAESU சுற்றறிக்கை )

CIRCULAR NO.3 & 4 - 2015

தமிழ்நாடு மின்கழகக் கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம் 
பதிவு எண் (2472) அங்கீகாரம் பெற்றது.
தலைமை இடம் சென்னை
k.சந்திரசேகரன் r...சந்திரசேகரன்
தலைவர் பொதுச்செயலாளர்
சுற்றறிக்கை – 3 /2015
நாள் : 20-03-2015

அன்புடையீர்

                     வணக்கம். தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தின்க்கூலித் தொழிலாளர்கள் நிரந்தரம் பெறுவதை நீர்த்துப்போக செய்யும் வகையில் தமிழ்நாடு தொழில்நிறுவனங்கள் ( பணியாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கும் )சட்டம் 1981லிருந்து மின்வாரியத்திற்கு திவிலக்களித்திட வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக அரசுக்கு மனு கொடுத்துள்ளதன் பேரில் தொழிற்சங்கங்களுடைய கருத்துக்களை அறிய தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இணை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் 16-03-2015 அன்று மதியம் 3.30 மணிக்கு பேச்சு வார்த்தை நடைபெற்றது. 


நிர்வாகத்தின் தரப்பில் தலைமைப்பொறியாளர் / பணியமைப்பு மற்றும் அவர் கீழ் பணிபுரியும் அலுவலர்களும், தொழிலாளர்கள் தரப்பில் சம்மேளனம், நமது சங்கம், தொ.மு.ச., மத்திய அமைப்பு, பொறியாளர் சங்கம், என்.எல்.ஓ, அண்ணா தொழிலாளர் சங்கம், ஐக்கிய சங்கம் ஆகிய சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்

.
நிர்வாகத் தரப்பில் புதிய மின் திட்டங்கள், அவ்வப்போது மேற்கொள்ளப் படும் சில பணிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்தத் தொழிலாளர்களை தேவைக் கேற்ப பயன்படுத்துவதாகவும் ஆனால் இவர்கள் மேலே சொல்லப் பட்ட சட்டத்தைப் பயன்படுத்தி தொழிலாளர் ஆய்வரிடம் நிரந்தர உத்திரவு பெற்று விடுவதாகவும் இதனால் நிர்வாகத்திற்கு போதிய கல்வித் தகுதி இல்லாத தொழிலாளர்கள் நிரந்தரப் படுத்தப் படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுவதாகவும், எண்ணற்ற வழக்குகளை சந்திக்க வேண்டியிருப்பதாலும் வாரியத்திற்கு பொரூளாதார நெருக்கடி ஏற்படுவதாகவும், இன்னும் சில தேவையற்ற விஷயங்களைச் சொல்லி இந்த சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளித்திட வேண்டுகோள் விடுக்கப் பட்டது. 


தமிழ்நாடு தொழில்நிறுவனங்கள் ( பணியாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கும் ) சட்டம் 1981, ஒரு சமுதாய பாதுகாப்பு சட்டம் என்பதாலும், தொழிலாளர் நலம் காத்திடும் சட்டம் என்பதாலும் இதற்கு விதிவிலக்கு அளிப்பதற்கு ஐக்கிய சங்கத்தைத் தவிர வேறு எந்த சங்கமும் ஒப்புதல் அளிக்க வில்லை.விதிவிலக்கு கேட்பது நியாயமல்ல என்பதற்கு நமது சங்கத்தின் சார்பில் கீழ்கண்ட வாதங்களை முன்வைத்தோம்.


1) மின்சாரவாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், நிர்வாகம் சொல்லுவதுபோல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்ல.

2) நிர்வாகம் சொல்லுவது போல் அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றால்,
இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப் படவேண்டும்
.
அ) மின்சாரவாரியம் தன்னை ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970 பிரிவு 7ன் கீழ் ஒப்பந்தத்தொழிலாளர் முறையை பின்பற்றுவதற்கு பதிவு ( ரிஜிஸ்ட்ரேஷன்) செய்து கொண்டிருக்க வேண்டும்.

ஆ) ஒப்பந்தக்காரர்கள், மின்சாரவாரியத்தின் பணிகளை தனது தொழிலாளர்களை கொண்டு செய்திட உரிமம் ( லைசென்ஸ்) பெறவேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளை மின்சார வாரியம் பூர்த்தி செய்யாததால்தான் நீதியரசர் காலித் அவர்கள், இந்நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், நிர்வாகம் சொல்லுவது போல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்ல மாறாக இவர்கள் மின்வாரியத்தின் நேரடித் தொழிலாளர்களே என்று அறிவித்து மாநிலம் முழுமையிலும் பணிபுரியும் இத்தகைய தொழிலாளர்களின் பட்டியலை தருமாறு நிர்வாகத்தைப் பணித்தார். 

3) நிர்வாகம் தன்னிடம் ஒப்பந்தத் தொழிலாளர் பட்டியலும் இல்லை, ஒப்பந்தக்காரர் பட்டியலும் இல்லை என்று கூறியதால் தொழிற்சங்கங்கள் கொடுத்த பட்டியலை கீழ்கண்ட அளவு கோலை வைத்து நிரந்தரம் செய்வதற்கு நீதிபதி அறிக்கை கொடுத்தார். 

அ) இளநிலை/உதவி பொறியாளர் கொடுத்த பணிச்சான்று.

அல்லது

ஆ) நிரந்தரத் தொழிலாளி கொடுத்த பணிச்சான்று. 

அல்லது

இ) சம்மந்தப்பட்ட தொழிலாளியின் சுய சான்று.

5) மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில் 18,006 பேர் நிரந்தரம் செய்திட 1991ல் பரிந்துரை செய்யப் பட்டது. 

6) காலித் கமிஷன் அறிக்கையில் இடம் பெற முடியாத ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றங்ள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் தொடுத்ததில் காலித் கமிஷன் அறிக்கையை விரிவு படுத்த முடியாது என்று தீர்ப்புகள் வழங்கப் பட்டுவிட்டன.

 
7) இதற்குப் பிறகு தான், நீதியரசர், மின்வாரித்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்ல மாறாக நேரடித் தொழிலாளர்கள்தான் என்று உறுதிபடக் கூறிவிட்டதால் சங்கங்கள் தமிழ்நாடு தொழில்நிறுவனங்கள் ( பணியாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கும் )சட்டம் 1981 பிரிவு 3ன்படி 24 காலண்டர் மாதங்களில் தொடர்ச்சியாக 480 நாள் பணிபுரிந்தவர்கள் நிரந்தரப் படுத்தவேண்டும் என்ற சட்ட வரையறையைப் பயன்படுத்தி 1997ம் அண்டு முதல் தொழிலாளர் ஆய்வர் முன் மனு கொடுத்து தொழிலாளர்களுக்கு பணிநிரந்தர அந்தஸ்து பெறப் பட்டு வருகிறது.
8) தொழிலாளர் ஆய்வாளரின் பணிநிரந்தர உத்திரவுகளை எதிர்த்து நிர்வாகம் சென்னை உயர்நீதி மன்றங்களில் கொடுத்த ரிட் மனுக்கள், ரிட் அப்பீல்கள் உச்ச நீதிமன்றத்தின் செய்யப் பட்ட எஸ்.எல்.பிக்கள் எல்லாம் தள்ளுபடியாகிவிட்டன. தொழிலாளர் ஆய்வாளரின் பணிநிரந்தர உத்திரவுகள் மேற்படி நீதிமன்றங்களால் உறுதி செய்யப் பட்டுவிட்டன.

9) தமிழ்நாடு தொழில்நிறுவனங்கள் (பணியாளர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்கும் ) சட்டம் 1981 பிரிவு 3ன்படி ஒரு சமுதாய பாதுகாப்புச் சட்டம் என்பதால், இச்சட்டத்தை அமுல்படுத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிக்கவேண்டுமென்ற வாரிய நிர்வாகத்தின் மனுவினை ஏற்றுக்கொள்ளக்கூடாது, நிராகரிக்கவேண்டும் என்று வாதிட்டோம். 
10) தொழிலாளர் இணை ஆணையர் அவர்கள் நாம் தெரிவித்த வாதங்களின் அடிப்படையில் வாரியத்தின் வேண்டுகோளை ஏற்க முடியாது என்று அறிவித்து, பேச்சுவார்த்தையை முடித்து வைத்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். 

தோழமையுள்ள
பொதுச்செயலாளர் 

பெறுநர் : கிளைச்செயலாளர்கள், கோட்டச்செயலாளர்கள், வட்டச்செயலாளர்கள்,
, மண்டலச்செயலாளர்கள் மற்றும் மத்திய சங்கப் பொறுப்பாளர்கள்.
. தமிழ்நாடு மின்கழகக் கணக்காயர் களத் தொழிலாளர் சங்கம்
பதிவு எண் (2472) அங்கீகாரம் பெற்றது.

தலைமை இடம் சென்னை
k.சந்திரசேகரன் r.சந்திரசேகரன்
தலைவர் பொதுச்செயலாளர்
சுற்றறிக்கை – 4 /2015
நாள் : 20-03-2015

அன்புடையீர்

வணக்கம். களப் பிரிவு தொழிலாளர்களின் இருவழிப்பாதை பதவி உயர்வில் கொள்கை மாற்றம் செய்திட வாரியத்தால் அமைக்கப் பட்ட அதிகாரிகளின் குழு 10/2014ல் சங்கங்களுக்கு கொடுத்த அறிக்கையின் மீது தொழிற்சங்கங்களின் கருத்தறிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

நமது சங்கத்துடனான பேச்சு வார்த்தை 19-03-2015 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. நிர்வாகத்தின் தரப்பில் வாரியச்செயலாளர், தலைமைப் பொறியாளர் / பணியமைப்பு, மேற்பார்வை பொறியாளர் / செங்கல்பட்டு மற்றும் நிர்வாகப் பிரிவு உயர் அலுவலர்களும், நமldது சங்கத் தரப்பில் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் நிதிச்செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

நமது சங்கத்தின் தரப்பில் கீழ்காணும் கருத்துக்களை முன் வைத்தோம்.

1) குழு அறிக்கையை பொதுவாக வரவேற்கிறோம். 

2) இரு வர்க்கப் பணிப்பாதை பதவி உயர்வு முறையையும் 
3) புதிதாக உதவி வணிக மேலாளர், மற்றும் வணிக மேலாளர் பொறுப்புக்கள் உருவாக்கப் படுவதையும் ஏற்றுக்கொள்ளுகிறோம். 

4) களப்பிரிவில் பதவி உயர்வு வாய்ப்புக்களில் இயற்கையாகவும், செயற்கையாகவும் உருவாக்கப் பட்ட பாகுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் கீழ்கண்டவகையில் சுட்டிக்காட்டினோம். 

அ) கம்பியாளருக்கும் – மின்பாதை ஆய்வாளருக்கும் பதவி உயர்வு விகிதாச்சாரம் 7:1 வணிக உதவியாளருக்கும், வணிக ஆய்வாளருக்கும் பதவி உயர்வு விகிதாச்சாரம் 1:1 இதனால் வணிக உதவியாளர்கள் விரைவாக பதவிஉயர்வு பெறும் நிலையும் கம்பியாளர்கள் தாமதமாக பதவிஉயர்வு பெறும் நிலையும் ஏற்படுகிறது. 

ஆ) கம்பியாளரிலிருந்து மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு பெற 8 ஆண்டு அனுபவம் வேண்டும் என்றும் வணிக ஆய்வாளர் பதவி உயர்வு பெற பணி அனுபவமே தேவையில்லை என்றும் தவறாக வியாக்கியானம் செய்து பதவி உயர்வு வழங்கப் படுகிறது.

இ) வணிக ஆய்வாளர் பட்டியல் மற்றும் மின்பாதை ஆய்வாளர் பதவிஉயர்வு பட்டியல் ஒரே நாளில் வெளியிடப் படவேண்டும் என்று தலைமையக உத்திரவு, முறையாகப் பின்பற்றாமல் வணிக ஆய்வாளர் பதவி உயர்வு பட்டியல் முன்னதாகவும், மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு பட்டியல் பின்னதாகவும் வெளியிடப் படுகிறது.

ஈ) ஆக்க முகவர் முதல் நிலை பதவி உயர்வுக்கு வணிக ஆய்வாளர் மற்றும் மின்பாதை ஆய்வாளர் ஆகிய இருவரும் ஒருங்கிணைக்கப் படுவதாலும் ஆக்க முகவர் முதல் நிலை பதவி உயர்வுக்கு கீழ்நிலை பொறுப்பு (NNext below Category ) முதன்மை எடுத்துக்கொள்ளப் படுவதாலும் 1:1 விகிதாச்சாரத்தாலும் எவ்வித பணி அனுபவமும் தேவையில்லை என்பதாலும் கீழ் நிலை பொறுப்புக்கு முன்னதாக பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப் பட்டதாலும் ஆக்க முகவர் பொறுப்பு பெரும் பகுதியை வணிக ஆய்வாளர்கள் பெறுவதால் மின்பாதை ஆய்வாளர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். 1:1 என்கின்ற முறையில் விரைவாக வணிக உதவியாளர்கள் பதவி உயர்வு பெறுவது தவறென்று கூற முடியாது. ஆனால் வணிக ஆய்வாளர் பதவி உயர்வு பெற 8 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும் என்று வாரிய ஆணை எண் 94/ நாள் 03-10-1986 ( உத்திரவின் நகலை கொடுத்தோம் ) தெளிவாக வரையறுக்கப்பட்ட பின்னரும் அதனை பின்பற்றாதது முறைதானா என்று கேட்டோம். வாரியத்தால் பதில் கூற இயலவில்லை. மௌனம் சாதித்தார்கள். மௌனம் நம்முடைய கருத்துக்கு சம்மதம் என்றுதானே அர்த்தம். அதேபோல் வணிக ஆய்வாளர் பதவி உயர்வு பட்டியல் மற்றும் மின் பாதை ஆய்வாளர் பதவி உயர்வு பட்டியல் ஒரே தேதியில் வெளியிடாமல் முன்னரும் பின்னரும் வெளியிட்டு கம்பியாளர்களுக்கும் மின்பாதை ஆய்வாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவது நியாயம்தானா ? என்று கேட்டோம். இதற்கும் நிர்வாகத் தரப்பில் மௌனம் தான் பதிலாக கிடைத்தது.

5) ஒரே காலமுறை ( Same Time Scale ) மற்றும் சமமான பொறுப்புக்களில் (Equilant Post ) 9 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை வழங்கிட வேண்டும் என்று வாரியத்தின் தெளிவான உத்திரவுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்தும் திடீரென்று அதில் சந்தேகத்தைக் கிளப்பி ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் 9 ஆண்டுகள் பணியாற்றினால்தான் தேர்வுநிலை வழங்கிடவேண்டும் என்று நிர்வாகம் தேவையற்ற குழப்பம் செய்வதை சுட்டிக்காட்டினோம். ஏற்கனவே இருக்கும் விதிகள்படி தேர்வுநிலை வழங்க விரைவில் உத்திரவிடப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. 
6) 10-08-2007 ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஐ.டி.ஐ. தேர்வு பெற்று நிரந்தர கள உதவியாளர் மற்றும் மீட்டர் ரீடராக காலமுறை ஊதியத்தில் நியமிக்கப் பட்டவர்களை பயிற்சி கள உதவியாளர்களுக்குப் பின்னால் முதன்மை (SenioritySeniority ) கொடுத்திட உத்திரவிட்டது சரியல்ல என்று தெரிவித்தோம். உத்திரவு மறுபரிசீலனை செய்யப் படும் என்று நிர்வாகம் தெரிவித்தது. 


7) 9-1-2014 வேலைபளு ஒப்பந்தத்தில் புதிதாக அனுமதிக்கப் பட்ட பொறுப்புகளில் பதவி உயர்வு வாய்ப்பினை பெற்றிடும் பொருட்டு ஏற்கனவே துறக்கப் பட்ட பதவி உயர்வினை ரத்து செய்திட வேண்டுமென்று தொழிலாளர்களும், சங்கங்களும் முறையிட்டதினை ஏற்று வாரியம் 04-12-2014 உத்திரவினை பிறப்பித்தது. இதன்படி ஏற்கனவே தயாரிக்கப் பட்டு நிலைவையில் உள்ள பதவி உயர்வு பட்டியலில் பதவி உயர்வை துறந்த தொழிலாளர்களின் பெயர்களைச் சேர்க்க சிலர் ஆட்சேபணை எழுப்புவது சரியல்ல என்று தக்க முன் ஆதாரங்களுடன் வாதிட்டோம். ஆட்சேபணையை நிராகரிப்பது குறித்து பரிசீலிக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டது. 


8) உபகோட்டங்களில் 2 வணிக ஆய்வாளர்கள் என்ற குழுவின் பரிந்துரைக்குப் பதிலாக ஒரு வணிக ஆய்வாளர், ஒரு உதவி வணிக மேலாளர் வழங்கிட வேண்டுமென்றும், 
பிரிவு அலுவலகங்களில் 2 வணிக உதவியாளர் என்ற குழுவின் பரிந்துரைக்குப் பதிலாக தற்போது இருக்கும் ஒரு வணிக உதவியாளர், ஒரு வணிக ஆய்வாளர் என்பது தொடரவேண்டுமென்றும், 110கே.வி ( Non-Grid S.S ) துணை மின் நிலையங்களில் பராமரிப்பு செய்ய ஆக்க முகவர் முதல்நிலை அவசியம் என்பதால் அதனை ரத்து செய்யக் கூடாது என்றும், மத்திய அலுவலகங்களில் 6 APDRP & GIS MaPPING முதலிய பணிகளை ஒருங்கிணைத்திட ஒரு வணிக மேலாளர் பொறுப்பினை வழங்கிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமான பதவி உயர்வு சம காலத்தில் வழங்கிட உறுதி செய்ய வேண்டும்ன்றும் கேட்டுக்கொண்டோம். 


9) தற்போது இருக்கும் அனைத்து களத் தொழிலாளர்களுக்கும் பொறுப்புக்களை மாற்றிக் கொள்ள ஒரு வாய்ப்பு (Option ) தரவேண்டும் என்று வலியுறுத்தினோம்.

நமது சங்கத்திற்கு பேச்சுவார்த்தைக்கு ஒதுக்கப் பட்ட நேரம் 30 நிமிடம் மட்டுமே. ஆனாலும் பேச்சுவார்த்தை சுமுகமாகவும், பயனுள்ளதாகவும் தொடர்ந்ததால் நேரம் கடந்ததே தெரியவில்லை. 45 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததை இரு தரப்பிலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. நமது சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற முதல் நேரடி பேச்சுவார்த்தை இது. கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைக்கு சென்றுவிட்டு திரும்பும் போது திருப்தியுடனும், பெருமிதத்துடனும் நமது சங்கப் பொறுப்பாளர்கள் வருவது நமது அனுபவம் ஆகும். அதே உணர்வு, மகிழ்ச்சி, பெருமிதம், அனுபவம் ஆகியவை தற்போதைய பேச்சுவார்த்தையின் போதும் ஏற்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

“தெளிவுபெற்ற தொழிலாளர் இனம் ஒரு வலிமை பெற்ற போர்படைக்குச் சமம்.”
( மாவீரன் லெனின் )
தோழமையுள்ள
பொதுச்செயலாளர்

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click