மத்திய அரசு, 2008ல், 'திருத்தி அமைக்கப்பட்ட, துரிதப்படுத்தப்பட்ட மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டம் (ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி.,)' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் நோக்கம், மின் நுகர்வோருக்கு, தரமான மின்சாரத்தை, சீரான முறையில் வினியோகம் செய்தல் மற்றும் மின் இழப்பை, 15 சதவீதத்திற்கு கீழ் கொண்டு வருவதுதான்.
கடந்த, 2001, மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும், நகரம் மற்றும் மாநகர் பகுதிகளில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், இரு பிரிவுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. முதல் பிரிவின் படி, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, மின் உபகரணங்களை அமைத்து, மின் பயன்பாட்டு திறன் மற்றும் இழப்பீடு கணக்கீடு செய்தல் ஆகிய பணி மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக, புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தல், துணை மின் நிலையங்கள் ஏற்படுத்துதல், புதிய மின் பாதை அமைத்தல் உள்ளிட்ட, மின் பகிர்மானத்தை வலுப்படுத்தும் பணி செய்யப்படுகிறது.
ரூ.417 கோடி:
தமிழகத்தில், சென்னை, அரக்கோணம், ஆரணி, ஆத்தூர், பவானி, சத்தியமங்கலம், கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட, 110 நகரங்களில், மேற்கண்ட பணி செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்ட பணிகளுக்காக, 417 கோடி ரூபாயும், இரண்டாவது கட்ட பணிகளுக்காக, 3,279 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி., திட்டத்தின், முதல் பிரிவான, தகவல் தொழில்நுட்பத்தின் படி, தற்போது வழங்கப்பட்டுள்ள, சாதாரண மீட்டரை திரும்ப பெற்று கொண்டு, 'ஆட்டோமேடிக் மீட்டர் ரீடிங்' எனப்படும், 'ஸ்டேடிக் மீட்டர்' அதாவது, டிஜிட்டல் மீட்டர் வழங்க, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. சாதாரண மீட்டரில், மின் பயன்பாடு மட்டும் கணக்கிடப்படுகிறது. இதனால், கணக்கீட்டாளர், மின் பயன்பாடு குறித்து, கணக்கீடு செய்த பின், அலுவலகத்திற்கு வந்து, மீண்டும் கணினியில் பதிவு செய்ய வேண்டி உள்ளது. இதன் மூலம், பல்வேறு முறைகேடுகளும் நடந்து வருகின்றன.
பின்பற்றப்படுமா...:
இதையடுத்து, முதல் கட்டமாக, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், பவானியில், டிஜிட்டல் மீட்டர் வழங்க முடிவு செய்யப்பட்டது. தற்போது, கோபிசெட்டி பாளையத்தில், சாதாரண மீட்டருடன், டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டு, சோதனை செய்யப்படுகிறது. ஆய்விற்கு பின், பல்வேறு பகுதிகளுக்கும், டிஜிட்டல் மீட்டர் வினியோகம் செய்யப்படும் என, தெரிகிறது. ஆனால், இதற்கான தொழில்நுட்பம் தெரிந்த மின்வாரிய பணியாளர்கள் உள்ளனரா? அல்லது பயிற்சி கொடுக்கும் திட்டம் உள்ளதா என்பதை விளக்கவில்லை. அதே போல இந்த மீட்டர் பொருத்தப்பட்டபின், பயனீட்டாளர் பிரச்னையை கிளப்பினால், அதை உடனடியாக சீர்செய்யும் திட்டமும் பின்பற்றப்படுமா என்பது இனிதான் தெரியும். தவிரவும் இந்த டிஜிட்டல் மீட்டர் தயாரிக்கும் கம்பெனியின் பொருட்கள், சிறந்த தரக்கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டு, பின்பு பொருத்தப்படுமா என்பதும் தெரியவில்லை.
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டிஜிட்டல் மீட்டரில், ஒரு, 'சிப்' பொருத்தப்படும். கணக்கீட்டாளருக்கு வழங்கப்பட உள்ள, 'ரிமோட்' கருவி மூலம், டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள, 60 மீட்டர் சுற்றளவுக்கு, எங்கு இருந்தாலும், கணக்கீட்டு விவரங்கள், 'ரிமோட்'டில், தானாகவே பதிவேற்றம் செய்யப்படும். இந்த தகவல், சென்னை யில் உள்ள, 'டேட்டா' மையத்திற்கு, உடனுக்குடன் பதிவாகும். இதனால், முறைகேடுகள் களையப்படும். டிஜிட்டல் மீட்டருக்காக, நுகர்வோரிடம் இருந்து, கட்டணம் தனியாக வசூலிக்கப்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment