மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கு மின்சார தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் கபிலன், 2011-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். அதன்பிறகு அந்தப் பதவி காலியாக உள்ளது.
புதிய தலைவர் நியமிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையில் மூன்று பேர் கொண்ட கமிட்டியை அரசு அமைத்தது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தலைவர் பதவியை நிரப்பும் நடவடிக்கை தாமதமாகி வருகிறது.
மேலும், ஒழுங்குமுறை ஆணையத்துக்கு 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒரு உறுப்பினரான வேணுகோபால் கடந்த ஜூலையில் ஓய்வு பெற்றதால், தற்போது ஒரு உறுப்பினருடன் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதனால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.
இந்நிலையில், மின் கட்டண ஒழுங்குமுறை தொடர்பாக மத்திய மின் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், மத்திய மின்சார தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.
விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி, தீர்ப்பாய தலைவரான உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகம், உறுப்பினர்கள் வி.ஜே.தல்வார், ராகேஷ்நாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மின்சாரக் கட்டணம் குறித்த விதிகளை, அனைத்து மாநில ஒழுங்குமுறை ஆணையங்களும் பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக மாநில ஒழுங்குமுறை ஆணையங்கள் பல்வேறு காரணங்களை கூறியுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநில ஆணையங்கள், தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தால் அதிகாரம் வழங்கப்பட்டு அமைக்கப்பட்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள், நீண்டகாலமாக தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை காலியாக வைத்திருப்பது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படும்.இதுபோன்ற நிலைமை நுகர்வோர் நலனை பாதிக்கும். மின்சார சட்டத்தின் நோக்கத்தையும் முழுமையாக நிறைவேற்றாது.எனவே, சம்பந்தப்பட்ட மாநிலங்களின் துறைகள் உடனடியாக செயல்பட்டு, தாமதமின்றி உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment