புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு மின் சிக்கன கட்டாய விதிகளை அமல்படுத்துவது குறித்து எரிசக்தித் துறை ஆய்வு செய்து வருவதாக தமிழக மின் துறை தலைமை ஆய்வாளர் அப்பாவு கூறியுள்ளார்.
தேசிய மின் சிக்கன வார விழா, சென்னையில் புதன்கிழமை நடந்தது. இதில் தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ‘‘மின் தேவை ஆண்டுதோறும் எட்டு சதவீதம் உயர்கிறது; ஆனால், அதற்கேற்ப உற்பத்தி உயர்வதில்லை. தமிழகத்தில் மின் பற்றாக்குறையை போக்க, முதல்வர் ஜெயலலிதா போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். வரும் நிதியாண்டுக்குள் தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீங்கி, மின் வெட்டு முற்றிலுமாக தளர்த்தப்படும். மின் சிக்கனத்தை கவனத்தில் கொண்டு, குடிசைகளில் குண்டு பல்புகளை மாற்றி சி.எப்.எல். பல்புகள் தர அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும்’’ என்றார்.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் நாகல்சாமி பேசும்போது, ‘‘அனைத்து வகையிலும் மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது. எரிசக்தியை வீணாக்காமல் சேமிக்கப் பழக வேண்டும். தற்போது அனைத்து தரப்பினரும் சாதாரணமாக 500 யூனிட்டுகளுக்கு மேல் மாதமிருமுறை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, கட்டண விகிதத்தில் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 500 யூனிட்டுகளை, 1,000 யூனிட்டுகளாக அதிகரிப்பது குறித்து பரிசீலினை செய்யலாம்’’ என்றார்.
‘‘இன்னும் 40 ஆண்டுகளில் எண்ணெய் வளம் முற்றிலுமாக குறைந்து விடும். நமது தலை முறையே கடைசிச் சொட்டு எண்ணெயை பார்க்கும் நிலைதான் உள்ளது. நிலக்கரி வளம் இன்னும் 200 ஆண்டுகள்தான் இருக்கும், எரிவாயு 60 ஆண்டுகளே கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே, எரிசக்தியை வீணாக்காமல் சேமிப்பதன் மூலம் அதற்கான ஆதா ரங்களை நீடிக்கச் செய்யலாம்’’ என்று தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் இயக்குநர் நாகேஷ் குமார் தெரிவித்தார்.
தமிழக மின் ஆய்வுத் துறை தலைமை மின் ஆய்வாளர்அப்பாவு பேசியதாவது: தமிழகத்தில் அதிக அளவு மின் சக்தியை நுகரும் எட்டு வகையான 41 தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, மின் சக்தியை சேமிப்பதற்கு கட்டாய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள், வரும் 2015-க்குள் இந்த இலக்கை அடைய வேண்டும்.
‘எரிசக்தி சிக்கன கட்டிட விதிகள்’ என்ற பெயரில், புதிய விதிகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் அந்த விதிகள் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.