அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க வட்டியில்லா முன்பணம் ரத்து: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு வட்டியில்லா முன்பணம் வழங்கலை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுனன், "ஏழாவது மத்திய ஊதியக் குழு அமலாக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு முன்பணம் வழங்கும் நடைமுறை ஒழிக்கப்பட்டுள்ளதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மாநிலங்களவையில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் எழுத்துப்பூர்வமாக புதன்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:
ஏழாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரைகளின்படி, அரசு ஊழியர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவதற்கு முன்பணம் வழங்கப்படும் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வப்போது வாகனங்கள் வாங்குவதற்கான சில திட்டங்கள் சந்தையில் நடைமுறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு வாகன முன்பணம் வழங்குவதை ரத்து செய்யுமாறு ஊதியக் குழு பரிந்துரை செய்திருந்தது. இப்பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று அமைச்சர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments: