சென்னை: தமிழ்நாடு மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், அடுத்த மாதம் முதல் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கு தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு, கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் அதிகபட்சம் 10 மணி நேரம் வரையும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வந்ததால், மின்வெட்டால் ஆளும்கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என பயந்தனர். இதையடுத்து, அதிக விலைக்கு வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி சமாளித்தனர். தேர்தல் முடியும் வரை மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த நிலையில், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்திச் செலவுக்கு ஏற்பட்ட மின்கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும், மின் வாரியத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் கடந்த 2011ம் ஆண்டில் மின்சார ஒழுங்குமுறை
ஆணையம் அமைக்கப்பட்டது. மத்திய மின்சார சட்டப்படி, மாநில மின்சார வாரியத்தின் நிதிநிலைமை, மின்சார வினியோகச் செலவுகள் மற்றும் மின் கட்டணத்துக்கான தோராய பட்டியலை ஆண்டுதோறும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளிக்க வேண்டும். ஆண்டுதோறும் நவம்பர் 30ம் தேதிக்குள் அவற்றை மின்வாரியம் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஆணையம் பரிசீலித்து, கட்டணத்தை உயர்த்துவதற்கான உத்தரவை பிறப்பிக்கும். அதற்கு முன்பாக பொது மக்களிடம் கருத்து கேட்கும். அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் மின் கட்டணத்தை உயர்த்தக்கோரி ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த 2011ம் ஆண்டில் அறிக்கை அளித்தது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு 2012ம் ஆண்டில் மின் கட்டணம் 37 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், கட்டணம் உயர்த்திய பின்பும் மின்வாரியம், ரூ.40
ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது மின்வெட்டை சமாளிப்பதற்காக தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியதால், இந்த நஷ்டம் மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, தேர்தலை மனதில் கொண்டு, நடப்பாண்டுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையை மின்வாரியம் சமர்ப்பிக்காமல் இருந்தது. இது பற்றி மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: மின்வாரியம் ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது என முதல்வரே தெரிவித்திருக்கிறார். மின்வாரியம் விரைவில் தனது அறிக்கையை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அளிக்கவிருக்கிறது. மேலும், மின்வாரிய நஷ்டத்தை கவனத்தில் கொண்டு, மின்சார கட்டணத்தை உயர்த்தவும் தீர்மானித்துள்ளது. கட்டண விகிதம் எவ்வளவு உயர்த்தப்பட வேண்டும் என்ற உத்தேச பட்டியல் மே முதல் வாரத்தில் ஆணையத்திடம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, முக்கிய நகரங்களில் கருத்து கேட்பு கூட்டம்
நடத்தப்பட்டு, மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. குறைந்தபட்சமாக யூனிட்டுக்கு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை உயர்த்தப்படலாம். இது ஜூனில் இருந்து அமல்படுத்தப்படலாம். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். கடைசியாக 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன்படி, தற்போது வீடுகளுக்கு முதல் நூறு யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 101 முதல் 200 யூனிட் வரை ரூ.1.50 என்றும், 201 முதல் 500 யூனிட் வரை ரூ.4 என்னும், 501க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால் ரூ.5.75 என்றும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்துடன், 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு நிரந்தர கட்டணம் என கூடுதலாக ரூ.20ம், அதற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு ரூ.40ம் வசூலிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment