சென்னை,
பிளஸ்–2 படிக்காமல் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று, இளநிலை பட்டம் பெற்றவர்கள் அரசு பணி பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் 10–ந் தேதி குரூப்–2 தேர்வுக்கும், அதே ஆண்டு டிசம்பர் 15–ந் தேதி குரூப்–1 தேர்வுக்கும் அறிவிப்புகள் வெளியிட்டது.
இந்த தேர்வுகளில் பலர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளின் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிடும்போது, சுமார் 40 பேருடைய தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.
இவர்கள் 10–ம் வகுப்பு படித்துவிட்டு, பிளஸ்–2 படிக்காமல், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக இளங்கலை பட்டம் பெற்றுள்ளனர் என்று ஒரு பிரிவினரையும், பிளஸ்–2 படித்துவிட்டு இளங்கலை பட்டம் படிக்காமல் நேரடியாக முதுகலை பட்டம் பெற்றவர்கள் என்று மற்றொரு பிரிவினரையும் காரணம் கூறி தேர்வு முடிவுகளை வெளியிடாமலும், அவர்களது விண்ணப்பத்தை நிராகரித்தும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் உத்தரவிட்டது.
முடிவு சரிதான்
இதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டி.என்.பி.எஸ்.சி மற்றும் தமிழக அரசு சார்பில் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்களில், ‘இளநிலை பட்டம் பெறாமல், திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுகலை பட்டம் பெற்றவர்களின் பட்டப்படிப்பு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல, 10–ம் வகுப்பு படித்துவிட்டு, பிளஸ்–2 படிக்காமல், நேரடியாக இளங்கலை பட்டம் பெற்றவர்களின் பட்டப்படிப்பு செல்லாது என்று தமிழக அரசு கடந்த 2009–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தும், அவர்களது தேர்வு முடிவுகளை வெளியிடாமலும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான்’ என்று கூறப்பட்டு இருந்தது.
தகுதித்தேர்வு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–
இளங்கலை பட்டம் படிக்காமல், நேரடியாக முதுகலை பட்டம் பெற்றவர்களின் பட்டப்படிப்பு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை சரிதான். அவற்றை ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால், 10–ம் வகுப்பு படித்துவிட்டு, பிளஸ்–2 படிக்காமல் நேரடியாக இளங்கலை பட்டப்படிப்பில் சேர்பவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்றும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களை இளங்கலை பட்டப்படிப்பில் சேர்க்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் மானியக்குழு (யு.ஜி.சி.) உத்தரவிட்டுள்ளது.
யு.ஜி.சி. உத்தரவு
ஆனால், இதுபோன்ற பட்டப்படிப்பு செல்லாது என்று 2009–ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஒரு பட்டப்படிப்பு செல்லும், செல்லாது என்பதை யு.ஜி.சி. பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில்தான் பரிசீலிக்க முடியுமே தவிர, மாநில அரசின் அரசாணையின் அடிப்படையில் அவற்றை பரிசீலிக்க முடியாது.
மேலும், இவர்கள் பிளஸ்–2 படிக்காவிட்டாலும், பல்கலைக்கழகம் நடத்திய நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர்தான் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளனர்.
எனவே, இந்த நேரடி இளங்கலை பட்டப்படிப்பு குறித்து யு.ஜி.சி. பிறப்பித்த விதிகளின் அடிப்படையில்தான் பரிசீலிக்க முடியும்.
பணி வழங்க வேண்டும்
யு.ஜி.சி. விதிகளின்படி, பிளஸ்–2 படிக்காமல் சிறப்பு நுழைவுத்தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்று பின்னர் நேரடியாக இளங்கலை பட்டப்படிப்பு பெற்றவர்களின் பட்டம் செல்லும். இந்த பட்டத்தை பெற்றவர்கள், அரசு பணி பெறுவதற்கு தகுதியானவர்கள்தான். அவர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்.
எனவே, பிளஸ்–2 படிக்காமல் நேரடியாக இளங்கலை படித்தவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தும், அவர்களது தேர்வு முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்தும் டி.என்.பி.எஸ்.சி. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment