மின் கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம் இல்லை: அரசு

சென்னை: தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையே மின் கட்டணம் செலுத்தும் முறை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.

சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாத விவரம்:

தங்க தமிழ்ச்செல்வன் (அதிமுக): மின் கட்டணத்தை இப்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை கட்டுவதைத் தவிர்த்து மாதாமாதம் கட்டுவதற்கு அரசு ஆவன செய்யுமா?

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மாதந்தோறும் மின் கட்டணத்தை வசூலிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. ஊழியர் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு வசதி குறை போன்றவையும் உள்ளன. எனவே, இப்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிப்பதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்போ, எதிர்ப்போ இல்லை. ஆதலால், இந்த முறையே தொடரும்.


குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்):
 முன்பு மின் கட்டணம் செலுத்துவதற்கு 15ம் தேதி கடைசி நாள் என இருந்தது. இப்போது, மின் கணக்கீடு எடுத்த நாளிலிருந்து 10 நாள்களுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. இதனால், மின் கணக்கீடு எப்போது நடக்கிறது என பொதுமக்களுக்கு தெரியாததால் 90 சதவீத மக்கள் அபராதத்துடன்தான் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். எனவே, முன்பு போல மின் கட்டணம் செலுத்த 15-ம் தேதி கடைசி நாள் என மின் வாரியம் அறிவிக்குமா? மேலும், எந்த இடத்தில் இருந்தும் கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படுமா?

அமைச்சர்: மின் கட்டணம் செலுத்துவதில் முன்பு இருந்த நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்கவே இப்போதைய புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் மாதத்தில் மட்டுமே சிறிது குழப்பம் இருக்கும். மின் கணக்கீடு செய்யும் பணி ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து நடைபெறுவதால் அதிலிருந்து அடுத்த 10 நாள்களுக்குள் கட்டணத்தைச் செலுத்துவதில் குழப்பம் எதுவும் இல்லை. மின் கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிக் கிளைகளில் செலுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது என்றார்.

No comments: