மதுரை: தமிழகத்தில் மின் பற்றாக்குறைக்கு காரணம் மின் உற்பத்திக்கான நீண்டகால திட்டம் இல்லாதது தான் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீங்கும் வரை, நெய்வேலி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்க தடை கோரி வழக்கறிஞர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தென் மண்டலத்தில் கர்நாடக மாநிலத்தில் அதிக மின் பற்றாக்குறை உள்ளது. அங்கு 18.9 விழுக்காடு மின் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் 17.5 விழுக்காடும் , ஆந்திராவில் 14.8, கேரளாவில் 5.1, புதுச்சேரியில் 4.5 விழுக்காடு மின் பற்றாக்குறையும் உள்ளது.
ஆந்திராவில் 2 ஆயிரத்து 82 மெகாவாட் மின் பற்றாக்குறையாக உள்ளது. கர்நாடகாவில் ஆயிரத்து 996, கேரளாவில் 179, தமிழகத்தில் 2 ஆயிரத்து 247, புதுச்சேரியில் 15 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது.
மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்வுக்கு மாநில அரசுகள் தான் முழுப் பொறுப்பு. மின் உற்பத்திக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகிறது. தமிழகத்தில் மின் பற்றாக்குறைக்கு, மின் உற்பத்திக்கான நீண்டகால திட்டம் இல்லாததே காரணம். தமிழகத்தில் மின் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே, மிகப்பெரிய இடைவெளி உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார்கள் செயல்படுத்தும் 12 மின் உற்பத்தி திட்டங்கள் பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது.
நெய்வேலியில் 2 ஆயிரத்து 740 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நெய்வேலி முதல் பிரிவில் 600, 2வது பிரிவில் 630, 2வது பிரிவில் 2வது நிலையில் 840, முதல் விரிவாக்கத்தில் 420, 2வது பிரிவு விரிவாக்கத்தில் 250 மெகாவாட் என 2 ஆயிரத்து 740 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் தமிழகத்திற்கு ஆயிரத்து 434 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படுகிறது.
மின் பகிர்வு திட்டங்களை வேகப்படுத்த மத்திய மின் தொகுப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரம் பெறுவது தொடர்பாக மாநில அரசுகளிடமிருந்து வரும் விண்ணப்பங்களை, விதிப்படி பரிசீலித்து அனுமதி வழங்கி வருகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment